கரூர் செய்தியாளர் மரியான் பாபு


உயிர்ம வேளாண்மை கருத்தரங்கில் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் விவசாயிகளுக்கு அறிவுறுத்தல்..

கரூரை அடுத்துள்ள மணவாடியில் அமைந்துள்ள தனியார் திருமண மண்டபத்தில் வேளாண்மைத் துறையின் சார்பாக மாவட்ட அளவிலான உயிர்ம வேளாண்மை கருத்தரங்கம் மற்றும் கண்காட்சியை மாவட்ட ஆட்சியர் மீ.தங்கவேல் தொடங்கி வைத்தார்.

இக்கருத்தரங்கில் மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது,தமிழ்நாடு அரசு வேளாண்மைத் துறைக்கென தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்து அதிக அளவில் நிதிகளை ஒதுக்கி திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக வேளாண் பெருங்குடி மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் விதமாக திட்டங்கள் அறிவித்து செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில் இன்றைய தினம் கரூர் மாவட்டத்தில் உயிர்ம வேளாண்மையை விவசாயிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வகையில் மாவட்ட அளவிலான கருத்தரங்கம் நடைபெறுகிறது.

இக்கருத்தரங்கின் மூலம் உயிர்ம வேளாண்மையில் இரசாயன உரம், பூச்சிக்கொல்லி மருந்து ஆகியவற்றை தவிர்த்து இயற்கையுடன் இணைந்த உயிரியல் சுழற்சி முறை, இயற்கை உரம் பயன்படுத்துதல் மூலம் பயிர் சாகுபடி செய்யப்படுவதோடு மண்வளத்தையும் பாதுகாப்பதே ஆகும்.

உயிர்ம வேளாண்மையின் மூலம் மண்ணில் உள்ள நுண்ணுயிர்களின் அங்கக கழிவுகளை நன்றாக மக்கச் செய்து மண்ணில் உள்ள அங்கக கரிமத்தை அதிகப்படுத்தி ஊட்டச்சத்துகளை மண்ணிற்கு அளித்து பயிர்கள் கிரகித்து கொள்ள உதவுகின்றன. இதனால் மாசற்ற சூழலில் பயிர்கள் வளர்வதனால் நஞ்சற்ற விளைபொருட்களை உற்பத்தி செய்ய முடியும். நஞ்சில்லா உணவு உயிர்ம வேளாண்மை மூலமே சாத்தியமாகும். “நஞ்சில்லா உணவின் தேடல்” தற்போழுது நுகர்வோரிடையே அதிகரித்திருப்பது வரவேற்புக்குரியது ஆகும். இதனால் மண்ணின் மேல் வாழும் உயிரிகளின் வாழ்நாள்அதிகமாகிறது.

வேளாண்மை துறை மூலம் உயிர்ம வேளாண்மையை ஊக்குவிக்கும் பொருட்டு, முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டத்தின் கீழ் இயற்கை இடுபொருட்கள் தயாரித்தல் மையம் அமைக்க குழு ஒன்றுக்கு ரூ.1.00 இலட்சம் மானியமும், உயிர்ம வேளாண்மைக்கான மாதிரிப் பண்ணைத்திடல் அமைக்க 1 விவசாயிக்கு ரூ.10,000/- மானியமும், 50 சதவீதம் மானியத்தில் பசுந்தாள் உர விதைகள் விநியோகமும்,50 சதவீதம் மானியத்தில் மண்புழு உரப்படுக்கைகளும், 100 சதவீத மானியத்தில் வேப்பங்கன்றுகள் மற்றும் ஆடாதொடா நொச்சி மரக்கன்றுகளும் விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது. கடந்த 2022-23 ஆம் ஆண்டு முதல் பாராம்பரிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் உயிர்ம விவசாயம் செய்வதற்கு தேவையான இடுபொருட்கள் வாங்குவதற்கு 1 ஹெக்டருக்கு ரூ.9000/- மானியமும், விவசாயிகளுக்கான கண்டுணர்வு சுற்றுலா மற்றும் உயிர்ம விவசாயிகள் குழுக்களுக்கு மதிப்பு கூட்டும் இயந்திரங்களும் வழங்கப்படுகிறது.

வேளாண்மைத்துறை மூலம் நடப்பாண்டில், உயிர்ம வேளாண் நடைமுறைகளை பின்பற்றி சிறப்பாக செயல்படும் தன்னார்வ விவசாயிகளை ஊக்குவிக்கும் பொருட்டு சிறந்த உயிர்ம விவசாயிகளுக்கு “நம்மாழ்வார் விருது“ வழங்கப்படுகிறது. இவ்வாறு உயிர்ம வேளாண்மை குறித்து தமிழ்நாடு அரசால் செயல்படுத்தப்படும் திட்டங்களை அனைத்து விவசாயிகளுக்கும் எடுத்துரைத்து அங்கக வேளாண்மை குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தி ஊக்கப்படுத்தும் விதமாக உயிர்ம வேளாண்மை கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் நடத்தப்படுகிறது.

எனவே விவசாயிகள் அனைவரும் உயிர்ம வேளாண்மையின் மூலம் நஞ்சில்லா பயிர்களைவிளைவித்து ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்க உதவிட வேண்டுமென மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து, வேளாண்மைத்துறையின் சார்பாக முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டத்தின் கீழ் இயற்கை இடுபொருள் உற்பத்தி மையம் அமைப்பதற்காக ரூ.1.00 இலட்சம் மானியமும், உயிர்ம வேளாண்மை மாதிரி பண்ணைத் திடல் அமைப்பதற்காக ரூ.10,000 மானியமும், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின் கீழ்விசைத்தெளிப்பான ரூ.2075 மானியமும், உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு இயக்கத்தின் கீழ் சிறுதானியம்-தார்பாய் விநியோகத்திற்கு ரூ.1000 மானியமும், முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டத்தின் கீழ் மண்புழு உரப்படுக்கைக்கு ரூ.3000 மானியமும்,
வேளாண் பொறியியல் துறையின் சார்பாக வேளாண் இயந்திரமயமாக்கல் துணைத் திட்டத்தின் கீழ் 3 ரோட்டவேட்டருக்கு ரூ.60,000, ரூ.46,000 மானியமும் மற்றும் ரூ.60,000 மானியமும், நுண்ணுயிர் பாசனத் திட்டத்தின் கீழ் மழைத்தூவுவான் ரூ.29,028 மானியமும், தேசிய உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு இயக்கத்தின் கீழ் 2 தார்பாய் விநியோகத்திற்கு தலா ரூ.1000 மானியமும், நுண்ணுயிர் பாசன திட்டத்தின் கீழ் ரூ. 38,622 மற்றும் ரூ.35,033 மானியமும்,தோட்டக்கலைத்துறையின் சார்பாக தேசிய தோட்டக்கலை இயக்கத்தின் கீழ் நிரந்தர மண்புழு உற்பத்தி கூடாரம் அமைப்பதற்காக ரூ.50,000 மும், தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் மா ஒட்டுச்செடிக்கு ரூ.12,000 மும் மற்றும் பிரதம மந்திரியின் நுண்ணீர் பாசன திட்டத்தின் கீழ் சொட்டு நீர்பாசனம் அமைப்பதற்காக ரூ.62,526 மும்,மேலும் 5 விவசாயிகளுக்கு மண்வளஅட்டைகளையும் என மொத்தம் 21 விவசாயிகளுக்கு ரூ.5.11 இலட்சம் மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் மீ.தங்கவேல் வழங்கினார்.இக்கருத்தரங்கில் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆர்.இளங்கோ (அரவக்குறிச்சி), க.சிவகாமசுந்தரி (கிருஷ்ணராயபுரம்), மாநகராட்சி மேயர் வெ.கவிதா,வேளாண்மை இணை இயக்குநர் ச.சிங்காரம், தாந்தோணி வட்டார உதவி இயக்குனர் பார்த்திபன், வேளாண்மை துறை உதவி விதை அலுவலர் தங்கமுத்து, தோட்டக்கலைத் துறை துணை இயக்குநர் தியாகராஜன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) உமா, விவசாயிகள் மற்றும் தொடர்புடைய அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *