நூலின் பெயர் : வாழ்வியல்நகைச்சுவை
நூல் ஆசிரியர் : முனைவர்.கு.ஞானசம்மந்தன்
மதிப்புரையாளர் : கவிஞர் இரா.ரவி
பல்வேறுஇலக்கியக் கூட்டங்களுக்கு சென்ற அனுபவம் எனக்குண்டு. மிகப் பெரிய
எழுத்தாளர் பேசப் போகிறார் என பீடிகைப் போட்டு பேச அழைப்பார்கள். அவர் பேச
ஆரம்பிக்கும் போது சொல்வார் எனக்கு அவ்வளவாக பேச வராது எழுத மட்டுமே வரும்.
மிகவும் வேண்டி அழைத்ததன் காரணமாக வந்தேன். நன்றி வணக்கம் என்று முடிப்பார்கள்.
அய்யா தொ.பரமசிவன் அவர்கள் வாழ்த்துரையில் குறிப்பிட்டது போல பேச்சில் வெற்றி
பெற்றவர் எழுத்திலும் வெற்றி பெற்றுள்ளார் என்பது உண்மை என்பதை நிரூபிக்கும்
விதமாக இந்நூல் வந்துள்ளது. அபூர்வமாக வாய்க்கும் திறமையை மிக அழகாகப்
பயன்படுத்தி உள்ளார். நூல் ஆசிரியர் பேராசிரியர் கு.ஞானசம்மந்தன் நூல் ஆசிரியர்
பற்றி முன்னணி எழுத்தாளர் மணா ஹைக்கூ கவிதை போல குறிப்பிட்டது முற்றிலும் உண்மை
மலர்ச்சியான முகம்
யாரையும்புண்படுத்தாத பேச்சு
பேச்சில் குமிழியிடும் நகைச்சுவை
ஒவியர் திரு.அரஸ் அவஸ் அவர்களின் வித்தியாசமான அழகிய ஓவியம் நூலிற்கு பெருமை
சேர்க்கின்றது. பேராசிரியர் அப்படியே புகைப்படம் போல தத்ரூபமாக வரைந்துள்ளார்.
சக மனிதனைச் சிறுமைப்படுத்தாத நகைச்சுவை உணர்வு ஆசிரியரிடம் வெளிப்படுகின்றது
என்பது உண்மையிலும் உண்மை. நகைச்சுவை என்ற பெயரில் ஊனமுற்றவர்களை பெண்களை
கொச்சைப்படுத்தும் காலத்தில் யாரையும் கொச்சைப்படுத்தாத தரமான நகைச்சுவைகளின்
தொகுப்பாக வந்துள்ளது இந்நுல் 33 கட்டுரைகள் முத்தான, முத்திரை பதிக்கும்,
புன்முறுவலை வரவழைக்க கட்டுரைகள், நட்பு என்றுமே வசந்தகாலம் என்ற நட்பின்
மகத்துவம் கூறும் கட்டுரைகள் தொடங்கி கடைசியாக அமெரிக்காவை கண்டுபிடித்தது
யார்? என முடியும் கட்டுரை வரை விறுவிறுப்பாக அட்டை முதல் அட்டை வரை அலுப்புத்
தட்டாமல் ஒரே மூச்சில் வாசிக்கும் உத்வேகத்தை தரும் மிகச் சிறந்த நடை “மக்களைப்
பார்க்க வைக்க எத்தனையோ யுக்திகள் இருக்கும் போது கொச்சையான வசனத்தினாலும் அங்க
அசைவினாலும் அவர்களை ரசிக்க வைக்க வேண்டுமா, என்பது இங்குள்ள கலைஞர்கள்
ஒவ்வொருவரும் கேட்டுக் கொள்ள வேண்டிய கேள்வி” இந்த வரிகள் நூலாசிரியர்
இலண்டனுக்குப் போன இயேசு நாடகம் கட்டுரை முடிவில் குறிப்பிட்ட வைர வரிகள்.
ஒருவனுக்கு ஒருத்தி தமிழ்ப்பண்பாட்டை சிதைக்கும் வண்ணம் பாலுணர்வை தூண்டிவிட்டு
வக்கிரங்களை விதைத்து வரும் படைப்பாளிகளைப் பார்த்து கேட்ட கேள்வியாகவே
உணருகிறேன்.
படித்து விட்டு தூக்கிப்போடும் சராசரி நூல் இல்லை இது. மனதில் கவலை வரும்
பொழுது எல்லாம் இந்நூலை படித்தால் கவலை பறந்துவிடும். இந்நூலை படிப்பதற்கு முன்
உள்ள மனநிலைக்கும் படித்து முடித்த பின் உள்ள மனநிலைக்கும் உள்ள வேறுபாடுகள்
நூலின் வெற்றி. நூலில் உள்ள நகைச்சுவைகளை நினைத்து நினைத்துப் பார்த்து
இன்புறும் வண்ணம் ஆவணப்படுத்தி இருக்கிறார். நூலாசிரியர், பேராசிரியர்,
முனைவர், கலைமாணி கு.ஞானசம்மந்தன் அவர்கள் தொடர்ந்து எழுத வேண்டும் வெற்றி வாகை
சூடிக்கொண்டே இருக்க வேண்டும்.
புத்தகத் திருவிழா கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வருவதால் தொலைக்காட்சிகளின்
வரவால் வழக்கொழிந்த வாசிக்கும் பழக்கம் திரும்பவும் புத்துணர்வு பெற்றுள்ளது
என்பது உண்மை.
புத்தகத்தை நேசிக்கும் வாசகர்களுக்கு இந்நூல் சிரிப்புப் பெட்டகம், வாசிக்கும்
சுகத்தை வாசகனுக்கு உணர்த்தும் உன்னத நூல், பல்வேறு தகவல்களையும் வரலாற்று
உண்மைகளையும் மனதில் நடவு செய்யும் நூல், புத்தகப் பிரியர்களின் பொக்கிசம்
இந்நூல், வாங்குங்கள், வாசியுங்கள், யோசியுங்கள், நீங்களும் படைப்பாளி
ஆகுங்கள். எப்படி எழுத வேண்டும் என கற்றுத்தரும் நூலாக உள்ளது.