தினம் ஒரு கருத்து கூறும் நவீன நூலிது
தொகுப்பாசிரியர் : தமிழ்த்தேனீ இரா.மோகன்
நூல் விமர்சனம் : கவிஞர் இரா.ரவி
N.C.B.H
இளைஞர்களின் நம்பிக்கை நட்சத்திரமாகத் திகழும் திரு. இறையன்பு இஆப அவர்களின் களஞ்சியம். உலகப் பொதுமறையான திருக்குறளுக்கு உரை எழுதினார்கள், எழுதுகிறார்கள், எழுதுவார்கள். ஆது போல திரு. இறையன்பு இஆப அவர்களின் படைப்பை, முனைவர் சுந்தர ஆவுடையப்பன் தொகுத்தார்கள். தமிழ்த்தேனீ முனைவர் இரா.மோகன் தொகுத்துள்ளார்கள், இன்னும் பல இளைஞர்கள் தொகுத்து வருகிறார்கள், இன்னும் தொகுப்பார்கள், அந்த அளவிற்கு அவரது படைப்பு மனிதரை நெறிப்படுத்தும், ஆற்றுப்படுத்தும்,பண்படுத்தும்,தன்னம்பிக்கை விதைக்கும் ஆற்றல் கொண்டது. தமிழ் இலக்கியம், ஆங்கில இலக்கியம் இரண்டும் அறிந்தவர். பல நூல்கள் நாளும் படிப்பவர்.

என்பது நூல்களை எழுதிக் குவித்த எழுத்துக் கரங்களுக்கு சொந்தக்காரர் தமிழ்த்தேனீ முனைவர் இரா.மோகன். இவர் சங்கத்தமிழ் முதல் இன்றைய இளம் கவிஞரின் ஹைக்கூ நூல் வரை கரைத்துக் குடித்தவர்.தமிழ்த்தேனீ என்ற பட்டத்திற்கு முற்றிலும் பொருத்தமானவர், நடமாடும் தமிழ்ப் பல்கலைக்கழகமாகத் திகழ்பவர். வீட்டுக்கொரு நூலக அறை வேண்டும் என்கிறோம். ஆனால் இவரோ,”நூலகத்தில் வீடு” என்று சொல்லுமளவிற்கு திரும்பிய பக்கமெல்லாம் நூல்களை சொத்தாக வைத்து இருப்பவர் மட்டுமல்ல, தினந்தோறும் வாசிப்பவர்.

திரு.இறையன்பு இஆப அவர்களுக்கு அறிமுகம் தேவையில்லை. 25 நூல்களுக்கு மேல் எழுதிக் குவித்தவர், கவிஞர், எழுத்தாளர், பேச்சாளர், பட்டிமன்ற நடுவர், செயலர், சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் தலைவர் என பன்முக ஆற்றலாளர். இயங்கிக் கொண்டே இருங்கள் என்று அடுத்தவர்களுக்கு போதிப்பதோடு நின்று விடாமல், தானும் இயங்கிக் கொண்டே இருப்பவர். “புதிய தலைமுறை” இதழில் “பயணங்கள் முடிவதில்லை” என்ற அறிவார்ந்த தொடர் எழுதி வருபவர். கலைஞர் தொலைக்காட்சியில் மானாட, மயிலாட நடக்குதே என முகம் சுளிப்பவர்களுக்கு ஆறதலாக இவரது தரமான பட்டிமன்றம் ஒளிப்பரப்பாகி வருகின்றது.

இந்த நூல் அறிவுக் களஞ்சியம் என்றே சொல்லலாம். இதனை வாசிப்பதோடு நின்று விடாமல், வாழ்வில் கடைபிடித்தால் வெற்றி உறுதி. மந்திரச் சொற்களாக உள்ளது. தொகுப்பாசிரியரின் உழைப்பை உணர முடிகின்றது. திரு. இறையன்பு அவர்களின் படைப்புகள் எனும் மலர்களில் இருந்து தேனை எடுத்து இலக்கிய விருந்து படைத்துள்ளார்.மூல ஆசிரியரால் தொகுப்பு ஆசிரியருக்கு பெருமையா? தொகுப்பு ஆசிரியரால் மூல ஆசிரியருக்குப் பெருமையா? ஏன பட்டிமன்றமே நடத்தலாம் அந்த அளவிற்கு மிகச் சிறப்பாக உள்ளது. வாசித்து விட்டு வைத்து விடும் சராசரி நூல் இல்லை,மனிதன் கவலை, விரக்தி, சோர்வு வரும் போதெல்லாம் எடுத்து வாசித்து தெம்பு ஏற்றிக் கொள்ளக்கூடிய டானிக் இந்த நூல்.

“ஆயிரம் சாதனைகளைக் காட்டிலும் ஒரே ஓர் உள்ளத்திலாவது நம்பிக்கை விளக்கு ஏற்றுவது வாழ்க்கையின் பொருளை முழுமையாக்குவது” என்பார் இறையன்பு என்று தொகுப்பாசிரியர் தன்னுரையில் குறிப்பிட்டுள்ளார். இது வெறும் வாசகம் அல்ல,இந்த நூலைப் படிக்கும் ஒவ்வொரு வாசகர் உள்ளத்திலும் நம்பிக்கை விளக்கேற்றுகின்றது என்பது உண்மையிலும் உண்மை. படித்துப் பார்த்தால் உணர்வீர்கள் நீங்களும்.

முனைவர் திரு.வெ. இறையன்பு இஆப அவர்களின் அனைத்து படைப்புகளுமே கனி போன்றவை. தொகுப்பாசிரியர் தமிழ்த்தேனீ இரா.மோகன் கனிச்சாறாக வழங்கி உள்ள தரத்திற்குப் பாராட்டுக்கள். இரசாயணம் கலக்காத தூய கனிச்சாறு இது. உடலுக்கும் உள்ளத்திற்கும் நலம் பயக்கும் நல்ல நூல்

இரும்பும் கரும்பும்

இதயம் இரும்பானால் இரும்பு யுகம்
உள்ளம் கரும்பானால் தங்க யுகம்
அவ்வளவு தான்
இந்த வைர வரிகளை இனவெறியர் ராஜபக்சே படித்து உணர்ந்து இருந்தால் லட்சம் தமிழர்கள் இறந்திருக்க மாட்டார்கள். படுகொலைகள் நடந்து இருக்காது.

நம்மில் பலர், எனக்கு நேரமே இல்லை என்று சொல்லிக் கொண்டு நேரத்தை முறைப்படி திட்டமிடாமல் விரயம் செய்து வருகின்றோம். அவர்கள் அனைவரும் கடைபிடிக்க வேண்டிய பொன்மொழி இதோ!

உழைப்பவர்களுக்கு நேரம் அதிகம்

நேரத்தைக் குறித்து ஒரு விதி உண்டு
யார் அதிகம் உழைக்கிறார்களோ
அவர்களுக்கே நேரம் அதிகம் இருக்கிறது.

உலகப் பொதுமறையாம் திருவள்ளுவர் சொன்ன, கனியிருப்பக் காய் கவர்ந்தற்று என்ற திருக்குறளுக்கு இனிய விளக்கம் போல், ஒர் இனிய பொன்மொழி இதோ!

வார்த்தைகளால் ஒருவரை குணப்படுத்தவும் முடியும்,
ரணப்படுத்தவும் முடியும்.

இதனை வாசகர்கள் உள்வாங்கிக் கொண்டு குணப்படுத்தும் சொற்களையே பயன்படுத்த வேண்டும். ரணப்படுத்தும் சொற்களைப் பயன்படுத்தக் கூடாது.

திரைப்படத்தில் வருவதைப் போல் நில நிமிடங்களிலேயே உயர்ந்த இலக்கை அடைய வேண்டும் என்று நினைக்கின்றோம். அதற்கான விடை இதோ!

உயர்ந்த இலக்கை அடைவது என்பது
ஒரேயடியாக நிகழ்வது இல்லை
ஒவ்வொரு அடியையும் ஒவ்வொரு
நொடியையும், ஒவ்வொரு படியையும்
உன்னிப்பாக உற்று நோக்குவதில் அது அடங்கியிருக்கிறது.

பல மணி நேரங்களை விரயம் செய்து விட்டு,உயர்ந்த இலக்கை அடைய முடியவில்லையே என விரக்தி கொள்கிறோம். ஓவ்வொரு நொடியையும் பயனள்ளதாக்கிக் கொண்டால்,இலக்கு என்பது நம்மை இலகுவாகக் கொண்டு வந்து சேர்க்கும் என்ற உண்மையை உணர்த்துகின்றார். இது வாசிக்கும் நூல் மட்டுமல்ல, நேசிக்கும் நூலும் ஆகும்.
இறையன்பு –கருத்துக்களஞ்சியம் என்பதை மெய்ப்பிக்கும் நூல்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *