குமரகுரு கலை அறிவியல் கல்லூரி சார்பில் இந்திய பாதுகாப்பு, பொருளாதாரம் பற்றிய 3-நாள் மாநாடு துவக்கம்; இந்திய ராணுவ தலைமை தளபதி பங்கேற்பு

கோவை, 18 டிசம்பர் 2025

குமரகுரு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் ரைசெட் அறக்கட்டளை இணைந்து நடத்தும் ‘கோயம்புத்தூர் கான்க்ளேவ் 2025’ எனும் பாதுகாப்பு, பொருளாதாரம் பற்றிய 3-நாள் மாநாடு சரவணம்பட்டியில் உள்ள குமரகுரு வளாகத்தில் இன்று தொடங்கியது.

மூன்று நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் இந்தியாவின் முன்னணி அரசு தூதர்கள், ராணுவ அதிகாரிகள், பொருளாதார வல்லுநர்கள் மற்றும் கொள்கை வகுப்பாளர்கள் ஒன்றிணைந்து, உலகளாவிய மாற்றங்களை இந்தியா எவ்வாறு தனக்கான வாய்ப்புகளாக மாற்றிக்கொள்ள முடியும் என்பது குறித்து ஆலோசிக்கின்றனர்.

இன்று நடைபெற்ற இதன் தொடக்க விழாவில் குமரகுரு கல்வி நிறுவனங்களின் தலைவர் சங்கர் வானவராயர் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். அடுத்த இரண்டு நாட்களுக்கு இந்த தளம் எதிர்காலத்தைப் பற்றிய ஒரு சிந்தனைப் புள்ளியாக இருக்கும் என்று அவர் குறிப்பிட்டார். இதில் இந்தியாவின் வளர்ச்சிக்கான வியூகம், பாதுகாப்பு மற்றும் ஆட்சித்திறன் (Statecraft) எனும் மூன்று முக்கிய கருப்பொருள்களில் விவாதங்கள் நடைபெறும் என்று கூறினார்.

இந்தியா சுதந்திரம் அடைந்த 100-வது ஆண்டான 2047-க்குள், நாட்டை ஒரு முற்றிலும் வளர்ச்சியடைந்த நாடாக மாற்றுவதற்கான இந்திய அரசின் ஒரு தொலைநோக்கு குறிக்கோளான ‘விக்சித் பாரத் 2047’ இலக்கை அடைவதில் மாணவர்களின் பங்கு மிக முக்கியமானது என கூறிய அவர், அவர்களை இந்த நிகழ்வில் முழுமையாக ஈடுபட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

ரைசெட் அறக்கட்டளையின் அறங்காவலர் குழுவின் செயல் தலைவர் டாக்டர் குல்ஷன் ராய் இணையவழியில் தொடக்க உரையாற்றினார்.

உலகளாவிய ஒழுங்கு தற்போது ஒருமுனை அல்லது இருமுனை அமைப்பிலிருந்து பலமுனை அமைப்பாக (Multipolar system) மாறி வருவதாகவும், இதில் அமெரிக்கா, சீனா, ரஷ்யா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இந்தியா ஆகியவை முக்கிய பங்கு வகிக்கத் தொடங்கியுள்ளன என்றும் அவர் கூறினார். குறிப்பாக செயற்கை நுண்ணறிவு (A.I.), அடுத்த தலைமுறை தகவல் தொடர்பு மற்றும் குவாண்டம் தொழில்நுட்பங்கள் போன்ற தொழில்நுட்ப மாற்றங்களே இன்றைய உலகை வழிநடத்துவதாக அவர் சுட்டிக்காட்டினார்.

தொடர்ந்து பேசிய டாக்டர் குல்ஷன் ராய், இந்தியா தற்போது உலகின் நான்காவது பெரிய பொருளாதாரமாக இருப்பதாகவும், விரைவில் மூன்றாவது இடத்தைப் பிடிக்கும் என்றும் தெரிவித்தார். இந்த வளர்ச்சியைத் தக்கவைக்க எல்லா பிரிவிலும் வேகம் மிக அவசியம் என்று குறிப்பிட்ட அவர், உற்பத்தி மற்றும் தொழில்நுட்ப மேம்பாடு ஆகிய துறைகளில் இந்தியா தனது சொந்த திறன்களை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றார். இதற்காக இந்தியா ஏற்கனவே ஒரு பில்லியன் டாலருக்கும் அதிகமான பட்ஜெட்டில் ‘இந்தியா ஏ.ஐ. மிஷன்’ மற்றும் ‘தேசிய குவாண்டம் மிஷன்’ ஆகியவற்றைத் தொடங்கியுள்ளதை அவர் சுட்டிக்காட்டினார்.

நிகழ்வின் சிறப்பம்சமாக, இந்திய ராணுவ தலைமை தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி ரைசெட் இணையதளத்தைத் தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்.

இன்றைய சூழலில் பாதுகாப்பு, தொழில்நுட்பம் மற்றும் பொருளாதாரம் ஆகிய மூன்றும் ஒன்றிணைந்து தேசிய முடிவுகளை வடிவமைப்பதாக அவர் தெரிவித்தார். இன்றைய உலகில் உள்ள தற்போதைய மாற்றங்கள் கணிக்க முடியாத சவால்களைத் தந்தாலும், தெளிவான சிந்தனை மற்றும் துல்லியமான கணிப்புகள் மூலம் அந்த சூழலை மூலோபாய வாய்ப்புகளாக மாற்ற வேண்டும் என்று அவர் கூறினார்.

விக்சித் பாரத் என்ற தொலைநோக்குப் பார்வையின் மூலம் இந்தியா இன்று ஒரு பெரிய மாற்றத்தின் விளிம்பில் உள்ளது என்று ஜெனரல் உபேந்திர திவேதி குறிப்பிட்டார். இந்தியாவின் மக்கள் தொகையில் அடுத்த பல ஆண்டுகளுக்கு இளைஞர்கள் அதிக அளவில் இருப்பார்கள் என்பதால் இந்தியாவின் எதிர்கால நலனுக்காக இந்த வாய்ப்பை நாம் சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

விழாவின் நிறைவாக குமரகுரு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் டாக்டர் தீபேஷ் சந்திரசேகரன் நன்றியுரை ஆற்றினார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *