பா. வடிவேல் – அரியலூர் செய்தியாளர்
அரியலூரில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை அனைத்து ஓய்வூதியர்கள் சங்கத்தின் சார்பில், 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் ஆர். ராஜகோபால் தலைமை வகித்தார். மாவட்ட துணைத் தலைவர் பி. மணிமொழி ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள வந்த அனைவரையும் வரவேற்றார்.
ஆர்ப்பாட்டத்தில் சங்கத்தின் மாவட்ட இணை செயலாளர்கள் என். ராசேந்திரன், எம். பாலுசாமி, கே. சபாநாயகர், மாவட்ட பொருளாளர் எஸ். சிவாஜி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். சங்கத்தின் மாநில செயற்குழு உறுப்பினர் எஸ். கபிலன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து தொடக்க உரையாற்றினார்.
இதனைத் தொடர்ந்து சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவர் என். கோபு உரையாற்றி, தமிழக அரசு ஓய்வு பெறும் நாளில் நடைமுறையில் உள்ள தற்காலிக பணி நீக்கம் என்ற நடைமுறையை முற்றிலுமாக கைவிட வேண்டும் என வலியுறுத்தினார். மேலும், சம வேலைக்கு சம ஊதியம் என்ற கோட்பாட்டின் அடிப்படையில் இளநிலை பொறியாளர்கள் மற்றும் உதவி பொறியாளர்களுக்கு இணையான ஊதிய விகிதத்தை வழங்கி உடனடியாக அரசு ஆணை வெளியிட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
அதேபோல், ஊராட்சி செயலாளர்களின் பணி காலத்தில் 50 சதவீத ஓய்வூதிய பயன்கள் கணக்கிட ஏதுவாக பொதுவான அரசாணை வெளியிட வேண்டும். ஊராட்சி செயலாளர்களுக்கு கடைசியாக பெற்ற ஊதியத்தில் 50 சதவீதத்தை ஓய்வூதியமாக அனுமதிக்க வேண்டும். பொருத்துநர்களுக்கு தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய பணிக்காலத்தை சேர்த்து கணக்கிட்டு, பத்தாண்டு பணி முடிவடைந்த நாளில் தேர்வு நிலை அந்தஸ்து வழங்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
மேலும், அரசு மற்றும் ஊராட்சி ஒன்றிய பணி ஓய்வூதியதாரர்கள் அனைவருக்கும் எந்தவித பிடிப்பும் இன்றி மருத்துவ காப்பீட்டு அடையாள அட்டை உடனடியாக வழங்க வேண்டும். ஊராட்சி ஒன்றிய பணி ஓய்வூதியதாரர்களின் வைப்பு தொகைக்கான வட்டி தொகையை தாமதமின்றி அனுமதித்து விரைவில் வழங்க வேண்டும். அரசுத்துறை ஓய்வூதியர்கள் தொடர்பான தகவல்களை அறிய களஞ்சியம் செயலி இருப்பதுபோல், ஊராட்சி ஒன்றிய பணி ஓய்வூதியதாரர்களுக்கும் உள்ளாட்சி நிதி தணிக்கை துறை இயக்ககம் சார்பில் தனி செயலியை ஏற்படுத்தித் தர வேண்டும் என்பன உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு அரசு ஓய்வூதியர்கள் சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவர் ஆர். ராமசாமி, தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை ஓய்வூதியர்கள் சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவர் தி. கணேசன், ஓய்வு பெற்ற வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கத்தின் மாவட்ட தலைவர் ஆர். முருகேசன், துணைத் தலைவர் டி.எம். கணேசன், முன்னாள் அலுவலக உதவியாளர்கள் சங்கத்தின் மாவட்ட தலைவர் எம். பெரியசாமி, ஓய்வு பெற்ற வேளாண்மைத் துறை அலுவலர்கள் சங்கத்தின் நிர்வாகி இராஜேந்திரன், தமிழ்நாடு அரசு ஓய்வூதியர் சங்கத்தின் மாவட்ட தலைவர் து. வேலுசாமி, மாவட்ட செயலாளர் என். ராஜமோகன், மாவட்ட தணிக்கையாளர் கே. சேகர் உள்ளிட்ட பல்வேறு சங்க நிர்வாகிகள் மற்றும் ஓய்வூதியர்கள் திரளாக கலந்து கொண்டனர்.