கரூர் சட்டமன்ற உறுப்பினர் வி. செந்தில்பாலாஜி மாவட்ட ஆட்சியர் மீ.தங்கவேல், இ.ஆ.ப. தலைமையில் கரூர் மாவட்டம், புகழூர் வட்டம், புகழிமலையில் வசிக்கும் 648 நபர்களுக்கு ரூ.5.98 கோடி மதிப்பீட்டிலான வீட்டு மனைப் பட்டாக்கள் மற்றும் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி, ரூ. 7.23 கோடி மதிப்பீட்டில் 11 புதிய வளர்ச்சி திட்டப் பணிகளை தொடங்கி வைத்தார்.
இவ்விழாவில் கரூர் சட்டமன்ற உறுப்பினர் தெரிவித்ததாவது,
தமிழ்நாடு முதலமைச்சரின்ஆட்சியில் தொடர்ந்து கரூர் மாவட்டத்திற்கு, பல்வேறு நலத்திட்டங்களை வழங்கிக் கொண்டிருக்கின்றார்கள்.அந்த வகையில், இன்றைய தினம் புகழூர் வட்டம், புகழிமலையில் பல ஆண்டுகளாக வசித்து வரும் பொதுமக்கள், நாம் இருக்கக்கூடிய இடத்திற்கு பட்டா கிடைக்குமா,கிடைக்காதா என்ற கேள்விக்குறியோடு இருந்த மக்களுக்கு தான் இருக்கும் இடத்திற்கு இந்த இரண்டுதலைமுறைக்கான கோரிக்கைகளை நிறைவேற்றக்கூடிய வகையில் அதற்கான ஒரு சிறப்பு நேர்வாக தமிழ்நாடு முதலமைச்சருடைய அறிவிப்பிற்கிணங்க பட்டா வழங்கக்கூடிய நிகழ்ச்சி நடைபெறுகிறது.
நம்முடைய கரூர் மாவட்டத்தில் 28,000 குடியிருப்பவர்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, ஏறத்தாழ 45,000 பயனாளிகளுக்கு அரசினுடைய சார்பில் வீட்டுமனைப்பட்டாக்கள் வழங்கப்பட்டுவருகின்றன.அதேபோல நம்முடைய புகழூர் வட்டத்தில் மட்டும் ஏறத்தாழ 3,250 நபர்களுக்கு வீட்டுமனைப்பட்டாக்களை வழங்கி அவர்களுக்கான அங்கீகாரத்தைத் தந்திருக்கிறது.
குறிப்பாக கடந்த காலங்களில் மாவட்ட ஆட்சியர்அலுவலகத்திற்கு நேரில் சென்று மனுக்களைக்கொடுத்துஅந்த மனுக்கள் சம்பந்தப்பட்ட வட்டாட்சியருக்கு அனுப்பி வைத்து, வட்டாட்சியர் அதைப் பெற்று சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலருக்கு அனுப்பி அதை ஆராய்ந்து, அதன் பிறகு உத்தரவைப் பெறுவதற்கான நிலையை மாற்றி, இன்று அந்தந்தப் பகுதிகளுக்கே அரசு நிர்வாகம் ஒட்டுமொத்தமாகச் சென்று, தமிழ்நாடு முழுவதும் 10,000 சிறப்பு முகாம்களை ‘உங்களோடு ஸ்டாலின்’ என்ற ஒரு சிறப்பு வாய்ந்த திட்டத்தை நடத்தி, அதன் மூலமாகப் பெறப்பட்ட மனுக்களுக்கும் தீர்வைத் தந்திருக்கக்கூடியவர் தமிழ்நாடு முதலமைச்சர் தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய மகளிருக்கு உரிமையைப் பாதுகாக்கக்கூடிய வகையில்1கோடியே30 லட்சத்து 69 ஆயிரம் மகளிருக்கு மாதம் 1,000 ரூபாய் உரிமைத் தொகையினையும், மேலும் விடுபட்டவர்களுக்கு மீண்டும் முறையீடு செய்யலாம் என்ற அந்த வாய்ப்பையும் தமிழ்நாடு முதலமைச்சர் இப்பொழுது வழங்கியிருக்கின்றார்கள்.மகளிருக்கு விடியல் பயணத் திட்டம்,படிக்கக்கூடிய மாணவிகளுக்கு புதுமைப்பெண் திட்டம், மாணவர்களுக்கு தமிழ்ப்புதல்வன் திட்டம், நான் முதல்வன் திட்டம், மக்களைத் தேடி மருத்துவம்,இல்லம் தேடி கல்வி எனத் தொடர்ச்சியாகப் பல்வேறு சிறப்புத் திட்டங்களைத் தந்திருக்கக்கூடிய முதலமைச்சருடைய ஆட்சியில் கரூர்,புகழூர் மற்றும் TNPL என2 பேரூராட்சிகளையும் ஒன்றிணைத்து புகழூர் நகராட்சியாகத் தரம் உயர்த்தி,மாவட்டத்தில் இருக்கக்கூடிய 3 நகராட்சிகளில் முதன்மை நகராட்சியாக புகழூர் நகராட்சிக்குத் தேவையான நிதிகளைக் கொடுத்து, அதைத் திறம்படச் செயல்படுத்துவதற்காக அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர்இளங்கோ, புகழூர் நகரமன்றத்தினுடைய தலைவர் குணசேகரன், துணைத் தலைவர், உறுப்பினர்கள் அந்தப் பணிகளை மிகச் சிறப்பாகச் செய்து வருகின்றார்கள்.இந்தப் பட்டா வழங்கக்கூடிய நிகழ்வுகள் மட்டுமல்ல, புகழூர் நகராட்சிப் பகுதிகளில் இங்கே வந்திருக்கக்கூடிய தாய்மார்கள்,பெரியோர்கள் கோரிக்கையை நிறைவேற்றக்கூடிய வகையில் சொல்லியிருக்கக்கூடிய அந்த கருத்துகளின் அடிப்படையில்,இங்கு 4 பகுதிகளில் ஏற்கனவே பத்திரப்பதிவு நடைபெறாமல் இருக்கிறது.
நாங்களும் அதற்கான நடவடிக்கை எடுப்பதாக ஏற்கனவே சொல்லியிருந்தோம். குறிப்பாக கந்தம்பாளையம், சுந்தராம்பாள் நகர், முல்லை நகர், வள்ளுவர் நகர் உள்ளிட்ட பகுதிகளில் அந்த மதிப்பீடு ‘ஜீரோ வேல்யூ’ செய்யப்பட்டுப் பத்திரப்பதிவு நடைபெறாமல் இருக்கின்றன.இந்த அரசு நிகழ்ச்சியின் மூலமாக ஒரு உறுதியை உங்களுக்குச் சொல்கின்றேன். இந்த நிலங்களில் இரண்டு வகைகள் உண்டு. ஒன்று 1967 மற்றும் 87-இல் அரசின் மூலமாகப் பட்டா வழங்கப்பட்ட இடங்கள் ஒன்று, மற்றொன்று அறநிலையத்துறைக்குச் சொந்தமான இடங்கள்.இதில் 1967 மற்றும் 87 – 67 என்பது மைனர் இனாம் ஒழிப்புச் சட்டத்தின் மூலம் வழங்கப்பட்ட அந்தப் பட்டாக்களும், 87-ஐப் பொறுத்தவரை UDR செட்டில்மெண்டில் கொடுக்கப்பட்ட பட்டாக்களுக்கும் எந்தவிதமான நமக்குத் தீமையும் ஏற்படாது. அது உடனடியாகப் பத்திரப்பதிவு செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு விரைவில் உங்களுக்கு ஒரு நல்ல தீர்வு எட்டப்படும் என்ற செய்தியை தெரிவித்துக் கொள்கின்றேன்.
எனவே கடந்த காலங்களில் இருந்த குளறுபடிகளைச் சரிசெய்து,அதை மக்களுக்கு ஒரு நல்ல தீர்வாகத் தரக்கூடிய அளவிற்கு மாவட்ட ஆட்சித்தலைவருடைய தலைமையிலே அதற்கான முன்னெடுப்புகள் எடுக்கப்பட்டு, சம்பந்தப்பட்ட துறையினுடைய உயர் அலுவலர்களுடன் சென்னையிலே பலமுறை கூட்டங்களை நடத்தி,எந்தெந்த இடங்கள் கரூர் மாவட்டத்தில் நேரடியாகக் கோயில்களின் பெயரில்இருக்கின்றன, எந்தெந்த இடங்களில் ஏற்கனவே பட்டாக்கள் வழங்கப்பட்டது.
என்பதையெல்லாம் பிரித்துப் பார்த்த வகையில் ஏறத்தாழ 6,000-த்திற்கும்மேற்பட்ட ஏக்கர் நிலங்கள் பட்டாக்கள்வழங்கப்பட்டும் இன்னும் கோயில் பெயரில் அந்த நிலங்கள் இருப்பதைக் கண்டறியப்பட்டு அது கோயில் ஆவணங்களிலிருந்து விடுவிக்கப்பட வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தி, மீதமிருக்கக்கூடிய கோயில் பெயரில் இருக்கக்கூடிய நிலங்களை மட்டும் கோயில் பதிவேட்டில் அதைச் செயல்படுத்த வேண்டும் என்றும், அதை கோயில் பதிவேட்டில் வைத்துக் கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டிருக்கின்றன.
அந்த வகையில் இங்கே வந்திருக்கக்கூடிய தாய்மார்கள், பெரியவர்கள் உங்களிடத்தில் நான் சொல்வது சுந்தராம்பாள் நகராக இருந்தாலும் சரி, வள்ளுவர் நகராக இருந்தாலும் சரி, முல்லை நகராக இருந்தாலும் சரி, கந்தம்பாளையமாக இருந்தாலும் சரி இந்த இரண்டு நிகழ்வின் மூலமாகப்பட்டாக்களைப் பெற்றவர்களுக்கு விரைவில் அந்தப் பத்திரப்பதிவு செய்வதற்கான நடவடிக்கை அரசு எடுக்கும் என்ற உறுதியை உங்களுக்கு தெரிவித்துக்கொள்கிறேன்.புகழூர் நகராட்சி அறிவுசார் மையத்தில் பயின்ற4மாணவர்கள் அரசுப் பணிகளுக்குச் செல்லக்கூடிய அளவிற்கு ஒரு அரசு நடவடிக்கை எடுத்திருக்கிறது.தமிழ்நாட்டில் இருக்கக்கூடியவர்கள் உயர்கல்வியில் இந்தியாவில் தமிழ்நாடு முதல் நிலை என்ற நிலையை உருவாக்கியதோடு, இந்தியாவிலேயே உழைக்கின்ற மகளிர் தொழிற்சாலைகளில் பணிபுரியக்கூடியவர்கள் 43 விழுக்காடு தமிழ்நாட்டில்தான் பணிபுரிகிறார்கள். என்று கூறினார்
முன்னாள் அமைச்சர் வி.செந்தில் பாலாஜி.பின்னர் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் சார்பாக சிறப்பு வரன்முறைப்பட்டா திட்டத்தின் கீழ் 381 பயனாளிகளுக்கு ரூ.3.81 கோடி மதிப்பீட்டிலான வீட்டுமனைப் பட்டாக்களும், 33 பயனாளிகளுக்கு நத்தம் வரன்முறைப்பட்டாக்களையும்,
பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் சார்பாக 10 பயனாளிகளுக்கு ரூ.56,500 மதிப்பீட்டிலான விலையில்லா தையல் இயந்திரங்களையும், 10 பயனாளிகளுக்கு ரூ.65,520 மதிப்பீட்டிலான சலவைப்பெட்டிகளையும், கருணை அடிப்படையில் 1 நபருக்கு பணி நியமன ஆணையினையும்,
கூட்டுறவுத்துறையின் சார்பாக 200 பயனாளிகளுக்கு ரூ.1.75 கோடி மதிப்பீட்டிலான கடனுதவிகளையும், மகளிர் திட்டத்தின் சார்பாக 5 பயனாளிகளுக்கு ரூ.39.22 இலட்சம் மதிப்பீட்டிலான கடனுதவிகளையும்,
வேளாண்மைத்துறையின் சார்பாக4 விவசாயிகளுக்கு ரூ.5,000 மதிப்பீட்டிலான நலத்திட்டஉதவிகளையும், தோட்டக்கலைத்துறையின் சார்பாக1 விவசாயிக்கு ரூ.43,175 மதிப்பீட்டிலான மழைத்தெளிப்பான்களையும்,
தொழிலாளர் நலத்துறையின் சார்பாக1நபருக்கு ரூ.55,000 மதிப்பீட்டிலான இயற்கை மரண உதவித்தொகையும்,1 நபருக்கு ரூ.20,000 மதிப்பீட்டிலான திருமண உதவித்தொகையும் மற்றும் 1 நபருக்கு ரூ.7,000 மதிப்பீட்டிலான கல்வி உதவித்தொகையும் என மொத்தம் 648 பயனாளிகளுக்கு ரூ.5.98 கோடி மதிப்பீட்டிலான அரசு நலத்திட்ட உதவிகளை கரூர் சட்டமன்ற உறுப்பினர் வி.செந்தில்பாலாஜி வழங்கினார்.முன்னதாக,கரூர் மாவட்டம், புகழூர் வட்டம், தோட்டக்குறிச்சி பள்ளி வாசலுக்கு ரூ.15.00 இலட்சம் மதிப்பீட்டில் சுற்றுச்சுவர் அமைக்கப்படவுள்ள பணி,வார்டு-15 சி.எஸ்.ஐ கிறிஸ்துவ தேவாலயத்திற்கு ரூ.2.50 இலட்சம் மதிப்பீட்டில் மேற்கூரை அமைக்கும் பணி, புகழூர் நொய்யல் சாலையில் ரூ.40.00 இலட்சம் மதிப்பீட்டில் பயணியர் நிழற்கூடம் அமைக்கும் பணி, வேலாயுதம்பாளையம் பகுதியில் ரூ.62.00 இலட்சம் மதிப்பீட்டில் ரவுண்டானா மற்றும் விளக்குகள் அமைக்கும் பணி, புகழிமலை அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் ரூ.61.50 இலட்சம் மதிப்பீட்டில் உயர்மட்ட கூரை அமைக்கும் பணி,வேலாயுதம்பாளையம் அரசு மருத்துவமனை வளாகத்தில் ரூ.3.50 கோடி மதிப்பீட்டில் கூடுதல் கட்டிடம் கட்டும் பணி,காந்தி மண்டபம் அருகில் மகளிர் சுய உதவிக்குழுக்களால் நடத்தப்படும் மதி அங்காடி ரூ.15.00 இலட்சம் மதிப்பீட்டிலும், ஹைஸ்கூல் மேடு பகுதி மற்றும் அண்ணா நகர் ஆகிய பகுதிகளில் ரூ.24.00 இலட்சம் மதிப்பீட்டில் பேருந்து நிழற்கூடம்,புகழூர் நகராட்சிக்குட்பட்ட வார்டு 4ல் உள்ள கூலக்கவுண்டனூர் துவக்கப்பள்ளியில் ரூ.51.50 இலட்சம் மதிப்பீட்டிலான 2 வகுப்பறைக் கட்டிடம், வேலாயுதம்பாளையம் மலைவீதியில் ரூ.86.00 இலட்சம் மதிப்பீட்டிலான வணிக வளாக கட்டிடம் மற்றும் காந்தியார் நடுநிலைப் பள்ளியில் ரூ.16.00 இலட்சம் மதிப்பீட்டிலான திறன் மிகு வகுப்பறை திறந்து வைத்தும் என மொத்தம் ரூ. 7.23 கோடி மதிப்பீட்டிலான 11 வளர்ச்சித் திட்டப் பணிகளை கரூர் சட்டமன்ற உறுப்பினர் வி.செந்தில்பாலாஜி திறந்து, துவக்கி வைத்தார்.இவ்விழாவில் அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் ஆர்.இளங்கோ, மாவட்ட வருவாய் அலுவலர் கு.விமல்ராஜ், புகழூர் நகர்மன்ற தலைவர் குணசேகரன், வேளாண்மைத் துறை இணை இயக்குநர் ச.சிங்காரம், புகழூர் வட்டாட்சியர் பிரபா மற்றும் தொடர்புடைய அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.