தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420
தாராபுரம்:உப்பாறு ஓடையில் ரூ.7.98 கோடியில் தடுப்பணை – அமைச்சர்கள் துவக்கி வைப்பு.
திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அருகே பெரிய குமாரபாளையம் பகுதியில் நீர்வளத்துறை சார்பில் ரூ.7.98 கோடி மதிப்பீட்டில் உப்பாறு ஓடையின் குறுக்கே தடுப்பணை அமைக்கும் பணிகளை செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் கயல்விழி ஆகியோர் திங்கட்கிழமை இரவு துவக்கி வைத்தனர்.
நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் மு.பெ.சாமிநாதன்,
தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்துள்ள நீர்வள திட்டங்கள் மாவட்டங்களில் விரைவாக நிறைவேற்றப்பட்டு, பொதுமக்களின் பயன்பாட்டிற்கு ஒப்படைக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்தார். அதன் ஒரு பகுதியாக, பெரியகுமாரபாளையம் கிராம மக்களின் நீண்டநாள் கோரிக்கையான உப்பாறு ஓடையின் குறுக்கே தடுப்பணை அமைக்கும் பணி துவக்கப்பட்டுள்ளதாக கூறினார்.
இந்த தடுப்பணை, தாராபுரம் வட்டம் பெரியகுமாரபாளையம் கிராமத்தில் அமைக்கப்படுகிறது. இதன் மூலம் பெரியகுமாரபாளையம், நவநாரி, பூளவாடி, முண்டு வேலம்பட்டி மற்றும் குண்டடம் பகுதிகள் பயனடையும். தடுப்பணையின் கொள்ளளவு 1452 மில்லியன் கன அடி. ஆண்டுக்கு மூன்று நிரப்புதல்கள் மூலம் 4.356 மில்லியன் கன அடி நீர் சேமிக்கப்படும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. தடுப்பணையின் உயரம் 12 மீட்டர், நீளம் 90 மீட்டராகும்.
இந்த திட்டம் நிறைவேறுவதன் மூலம் 187 திறந்த வெளி கிணறுகள், 33 ஆழ்துளை கிணறுகளில் நிலத்தடி நீர்மட்டம் உயரும். கூடுதலாக 217.80 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும். இதன் மூலம் நவநாரி கிராமத்தில் 1432 பேர், பெரியகுமாரபாளையம் கிராம மக்கள் மற்றும் முண்டு வேலம்பட்டி கிராமத்தில் 4199 பேர் உள்ளிட்ட பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் பயனடைவார்கள்.
முன்னதாக, நவநாரி கிராமத்தில் ரூ.7.58 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு தற்போது முழுமையாக நீர் நிரம்பியுள்ள உப்பாறு குறுக்குத் தடுப்பணையை அமைச்சர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
நிகழ்ச்சியில் தலைமை பொறியாளர் முருகேசன், கண்காணிப்பு பொறியாளர் கார்த்திகேயன், செயற்பொறியாளர் பிரபாகரன், உதவி செயற்பொறியாளர்கள் பாபு சபரீஸ்வரன், ஞானவேல், உதவி பொறியாளர் விஜயசேகர், கீர்த்தனா , திருப்பூர் மாநகராட்சி 4-ம் மண்டலத் தலைவர் இல.பத்மநாபன், குண்டடம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சந்திரசேகர் சடையபாளையம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஈஸ்வரன் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.