பா வடிவேல் அரியலூர் செய்தியாளர்
பாட்டாளி மக்கள் கட்சியின் முன்னாள் தலைவராக இருந்த ஜி.கே. மணியை, கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்குவதாக பாமக ஒழுங்கு நடவடிக்கை குழு அறிவித்துள்ளது. இந்த நீக்க நடவடிக்கையின் மூலம் பாமக இன்று புனிதமடைந்துள்ளதாக, அன்புமணி ராமதாஸ் பிரிவு பாட்டாளி மக்கள் கட்சியின் சமூக நீதிப் பேரவை தலைவர் வழக்கறிஞர் க.பாலு தெரிவித்தார்.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:
பாட்டாளி மக்கள் கட்சியின் கண்ணியத்திற்கும், ஒழுங்கிற்கும் குந்தகம் விளைவிக்கும் வகையில் ஜி.கே. மணி செயல்பட்டதாக, கடந்த 18ஆம் தேதி கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை குழு அவருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது. அந்த நோட்டீஸில் ஒரு வார கால அவகாசம் வழங்கப்பட்டு, அதற்குள் உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டது.
ஆனால், அந்த கால அவகாசம் நிறைவடைந்த நிலையிலும், ஜி.கே. மணி தரப்பிலிருந்து எந்தவித விளக்கமும் அல்லது பதிலும் கிடைக்கவில்லை.விளக்கம் அளிக்காமல் அமைதி காப்பது என்பது, விளக்கம் சொல்ல எதுவுமில்லை என்பதற்குச் சமம். இதனை அடிப்படையாகக் கொண்டு, நேற்று கூடிய பாமக ஒழுங்கு நடவடிக்கை குழு, கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதோடு, அனுப்பப்பட்ட நோட்டீஸ்க்கும் பதில் அளிக்காத காரணத்தினால், ஜி.கே. மணியை பாட்டாளி மக்கள் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து நிலைகளிலிருந்தும் நீக்குவதாக முடிவு செய்துள்ளது.
மேலும், தந்தை–மகன் உறவினை சீர்குலைக்கும் வகையிலும், குடும்ப நல்லுறவுகளை கெடுக்கும் வகையிலும் ஜி.கே. மணி மேற்கொண்ட செயல்கள் மாபாதகமானவை. அவர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டதன் மூலம், பாட்டாளி மக்கள் கட்சி இன்று புனிதமடைந்துள்ளது. இப்போது வெளிப்பட்டுள்ள இந்த நிலைப்பாடே, அவரது உண்மையான சுயரூபம் என்பதை மக்கள் புரிந்துகொண்டுள்ளனர்.
பாமக தலைமை நிலையத்தின் பெயரில் வெளியிடப்பட்டதாகக் கூறப்படும் பொது அறிவிப்பு நோட்டீஸ் தொடர்பாக பல்வேறு நாளிதழ்களில் விளம்பரங்கள் வெளியானது. ஆனால், அந்த நோட்டீஸ்களில் பல்வேறு முரண்பாடுகள் உள்ளன. ஒரே விஷயத்திற்கு இரண்டு விதமான நோட்டீஸ்கள், இரண்டு விதமான கருத்துகள் வெளியிடப்பட்டுள்ளன. இத்தகைய அபத்தமான நோட்டீஸ்களை நான் இதுவரை பார்த்ததே இல்லை.
கட்சியில் இன்றைக்கு ஏற்பட்டுள்ள இந்த நிலைக்கு முழு பொறுப்பும் ஜி.கே. மணியையே சாரும். இந்த விரிசல் இவ்வளவு தூரம் விரிவடையும் என்பது அவருக்கு முன்கூட்டியே தெரியும். அவர் திட்டமிட்டு செயல்பட்டதன் விளைவாகத்தான் இன்றைய சூழ்நிலை உருவாகியுள்ளது. அந்தத் திட்டத்தை தீட்டி, இதை செயல்படுத்துமாறு கூறியது திராவிட முன்னேற்றக் கழகமே.
திமுக கொடுத்த வேலையை ஜி.கே. மணி சிறப்பாக செய்து முடித்துள்ளார். அதற்கான வெகுமானம், சன்மானம் அவருக்கு உரிய நேரத்தில், உரிய விதத்தில் திமுகவிடமிருந்து கிடைக்கும் என நான் நம்புகிறேன். அவர் ஏற்கனவே அந்த சன்மானத்தை பெற்றிருக்கலாம் அல்லது பெறுவார் என்றார்.
இவ்வாறு க.பாலு தெரிவித்தார்.