திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஊராட்சி ஒன்றியத்தில் 50கிராம ஊராட்சிகள் உள்ளன. தினசரி கிராம ஊராட்சிகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை எடுத்துச் செல்வதற்கு ஏற்ற வகையில் கோவிந்தகுடி ஊராட்சிகளுக்கு மூன்று மின்கலன் வண்டிகளும், ஆவூர் ஊராட்சிக்கு இரண்டு மின்கலன் வண்டிகளும், ஆலங்குடி,அரித்துவாரமங்கலம், கொட்டையூர், மாளிகைதிடல்,மாணிக்க மங்கலம், மருவத்தூர், மேலவிடையல், மணலூர்,முனியூர்,புளியகுடி,ரகுநாதபுரம், தென்குவளவேலி, தெற்கு பட்டம்,நார்த்தாங்குடி உள்ளிட்ட 15 ஊராட்சிகளுக்கு தலா ஒரு மின்கலன் வண்டி வீதம் 17 கிராம ஊராட்சிகளுக்கு 20 மின்கலன் வண்டிகள் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் கூடுதல் ஆட்சியர் அறிவுறுத்தலின் படி, வலங்கைமான் அடுத்த கோவிந்தகுடி அரசினர் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் தூய்மை பணியாளர்களுக்கு மின்கலன் ஒட்டும் பயிற்சி வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) முரளி தலைமையில் வழங்கப்பட்டது.
தூய்மை காவலர்களுக்கு பயிற்சிகளை குடவாசல் மற்றும் திருவாரூர் பகுதியைச் சேர்ந்த ஒட்டுநர் பயிற்சி மையத்தைச் சேர்ந்தவர்கள் அளித்தனர். மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மாரியப்பன், வட்டார ஒருங்கிணைப்பாளர் சுபா, கோவிந்குடி ஊராட்சி செயலாளர் ஆனந்த் மற்றும் தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.