திண்டுக்கல் பேகம்பூர் காளியம்மன் கோயில் பின் சந்து மற்றும் மேற்குரத வீதி தொந்தியா பிள்ளை பள்ளியின் பின்புறம் என இரு இடங்களில் உடன்கட்டை ஏறும் நடு கற்களை கண்டெடுத்த வரலாற்று ஆய்வு குழுவினர் அதனை ஆய்வு செய்தனர்.
இது குறித்து அவர்கள் கூறியதாவது
மேற்கு ரத வீதியில் கண்டெடுத்த நடுகல் வீரனின் தலை கொண்டை இடது புறம் சரிந்தும் முகத்தில் முறுக்கிய மீசையும் , இரு கைகளும் கூப்பி வணங்கிய நிலையில் இடது கால் மடக்கியும் வலது கால் தரையில் ஊன்றியும் சுகாசன நிலையில் உள்ளார். இவரின் அருகே மதுகுடுவை வைத்த நிலையில் உள்ளது.வீரன் அமைதி காலத்தில் இறந்தபின் அவர் மனைவி உடன்கட்டை ஏறி உள்ளார். இந்த நடுகல் 17 ம் நூற்றாண்டை சேர்ந்ததாகும்
காளியம்மன் கோவில் சந்து பின் கண்டெடுத்த நடுகல்லில் வீரனும் அவரது மனைவியும் நின்ற நிலையில் உள்ளனர். இவரின் கொண்டை வலது புறம் சரிந்து வீரனின் கொண்டையில் உள்ளது போல் அணிமணியும், நெற்றியில் நெற்றி சூடியும் உள்ளது. வீரனின் தலைக்கு மேல் வாள் துாக்கிய நிலையில் உள்ளது சண்டையில் இறந்ததை குறிக்கிறது. வீரனின் மனைவி கையில் உள்ள மதுக் குடுவை அவர் இறந்ததும் அவரின் மனைவி உடன்கட்டை ஏறியதை குறிக்கிறது. இந்த நடுகல்லின் காலம் 13 , 14-ம் நுாற்றாண்டை குறிப்பிடுகிறது என்று தெரிவித்தனர்