தமிழ்நாட்டில் மத்திய அரசுக்கு இணையான ஊதியத்தை இடைநிலை ஆசிரியர்களுக்கு போராடிப்பெற்று வந்த நிலையில், அந்த ஊதியத்தை மிகச் சரியாகச் சொன்னால் 1.1.2006 முதல் இடைநிலை ஆசிரியர்கள் பறி கொடுத்துள்ளனர் என்பதுதான் எதார்த்தமான உண்மை. மத்திய அரசுக்கு இணையான ஊதிய மாற்றத்தை பெறுவதற்கான ஒன்றுபட்ட போராட்டக் களத்தை வடிவமைத்து மீண்டும் இடைநிலை ஆசிரியர்கள் எத்தகைய தியாகத்திற்கும் தயாராகி போராட வேண்டும்.

இது நாள் வரை நாம் பெற்று வரும் அனைத்து சலுகைகளும் அரசு தானாக முன்வந்து வழங்கியது அல்ல. மாறாக நமது ஓயாத போராட்டம், ஒன்றுபட்ட போராட்டம், ஓய்வறியாப் போராட்டங்களின் மூலமே கிடைக்கப் பெற்றவை ஆகும்.
சம வேலைக்கு சம ஊதியம் என்பது ஒரே பணி நிலையில் பணியாற்றும் ஊழியர்களில் ஆண், பெண் பாகுபாடு இன்றி ஊதியம் பெறுவது மட்டுமின்றி, அந்தப் பணி நிலையில் பணியாற்றும் அனைத்து ஊழியர்களுக்கும் தொகுப்பூதிய முறை, மதிப்பூதிய முறை, சிறப்புக் காலமுறை ஊதிய முறையில் ஊதியம் பெறும் நிலையை மாற்றி அந்தப் பணி நிலைக்கான காலம் முறை ஊதியத்தை உறுதி செய்வதே சம வேலைக்கு சம ஊதியம் என்பதாகும்.

எனவேதான், பணி நியமனங்களில் அவுட்சோர்சிங் முறை, தொகுப்பூதிய முறை, மதிப்பூதிய முறைகளை கைவிட்டு காலமுறை ஊதியத்தில் உழைப்பு சுரண்டல் இன்றி பணி நியமனங்களை வேண்டுகிறோம்.


இந்திய நாட்டின் சுதந்திரத்திற்கு பின் 40 ஆண்டு காலமாக பெற முடியாத மத்திய அரசுக்கு இணையான ஊதியத்தை தொடர்ந்து நடைபெற்ற பல்வேறு கட்டப் போராட்டக் களங்களில் பலர் தங்களின் இன்னுயிர் ஈந்தும், ரத்தம் சிந்தியும் இடைநிலை ஆசிரியர்கள் 31.5.1988 வரை அடிப்படை ஊதியமாகப் பெற்று வந்த ரூ 610 என்பதை, 5-வது ஊதியக் குழுவில் 1.6.1988 முதல் அடிப்படை ஊதியமாக ரூபாய்.1,200ஐ பெற்றோம் என்பது தான் வரலாறு.1988-ல் இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் மாற்றம் வேண்டும் என்ற முழக்கத்தை முன் வைத்த போது, கூரை ஏறி கோழி பிடிக்கத் தெரியாத வர்களுக்கு, வானம் ஏறி வைகுண்டம் காட்டப் போகிறார்களாம் என்றெல்லாம் ஏகடியம் செய்த நிகழ்வும் நடந்துள்ளது என்பதை யாரும் மறக்க முடியாது.

1.6.1988-ல் போராடிப் பெற்ற இடைநிலை ஆசிரியர்களின் ஊதியமானது, 1.1.1996 முதல் நடைமுறைப் படுத்தப்பட்ட ஊதியக் குழுவில் இடைநிலை ஆசிரியர்களுக்கு அடிப்படை ஊதியமாக ரூ 4,000 என நிர்ணயம் செய்து மீண்டும் மத்திய அரசுக்கு இணையான ஊதியம் மறுக்கப்பட்ட நிலையில், ஒன்றுபட்ட போராட்டத்தின் மூலம் மீண்டும் மத்திய அரசுக்கு இணையான ஊதியத்தை இடைநிலை ஆசிரியர்களுக்கு அடிப்படை ஊதிய மாக ரூ.4,500 என்பதை 1.1.1998 முதல் மீட்டது தான் போராட்ட வரலாறு.

1.1.2006 முதல் நடைமுறைப் படுத்தப்பட்ட ஊதியக் குழுவில் இடைநிலை ஆசிரியர்கள் மத்திய அரசுக்கு இணையான ஊதியத்தை சுமார் 18 ஆண்டுகள் இடைவெளியில் மீண்டும் இழந்தனர்.1.1.2006 முதல் நடைமுறைப் படுத்தப்பட்ட ஊதியக் குழுவில் இடைநிலை ஆசிரியர்களுக்கு ஊதியக் கட்டு 9,300-34,800 தர ஊதியம் 4,200 என நிர்ணயம் செய்வதற்கு மாறாக, ஊதியக் கட்டு 5,200-20,200 தர ஊதியம் 2,800 என கடைநிலை ஊழியர்களின் ஊதிய மாற்றத்திற்கு இடைநிலை ஆசிரியர்கள் தள்ளப்பட்டனர், என்பதுதான் எதார்த்தமான உண்மை.

இந்த ஊதியக்குழு நடைமுறைப் படுத்தப்பட்ட போது இடைநிலை ஆசிரியர் பணிநிலையில் தேர்வு நிலை மற்றும் சிறப்பு நிலை நிலையை 31.5.2009-க்கு முன்பாக அடைந்தவர்கள் 1.1.2006 முதல் தங்களது உரிமையான ஊதியக் கட்டு 9,300-34,800 தர ஊதியம் 4,200 என்பதை இழந்து அவரவர் தேர்வு நிலை, சிறப்பு நிலை தேதி வரை ஏற்கனவே இருந்த ஊதியக் குழுவில் தொடர்ந்தது மட்டுமின்றி ஊதிய மாற்ற நிலுவைத் தொகையையும் இழந்து, பின்னர் அவரவர் தேர்வு நிலை, சிறப்பு நிலை எய்திய நாளில் ஊதியக் கட்டு 9,300-34,800-ல் தர ஊதியமாக முறையே 4,300,4,800 எனத் தங்களது ஊதிய மாற்றத்தை அடைந்தனர்.

1.1.2006 முதல் மறுக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களின் மத்திய அரசுக்கு இணையான ஊதியத்தை மீட்டெடுக்கும் போராட்டங்களில் அரசாணை எரிப்புப் போராட்டம் உள்ளிட்ட போராட்டங்கள் தொடர்ந்து நடந்து கொண்டே இருந்த போதும், அடுத்த ஊதியக் குழுவில் ஊதிய மாற்றம் ஏற்பட்ட போது இடைநிலை ஆசிரியர்களின் அடிப்படை ஊதிய விகிதமானது 20,600-75,900 என முந்தைய ஊதிய குழுவில் பெற்ற ஊதிய விகிதத்தின் (ஊதியக் கட்டு 5,200-20,200 தர ஊதியம் 2,800) அடிப்படையில் நடைமுறைப் படுத்தப்பட்டு இடைநிலை ஆசிரியர்களின் ஊதியம் அதல பாதாளத்திற்கு சென்றது.

மீண்டும் இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியத்தை மீட்டெடுக்க வேண்டுமெனில், இடைநிலை ஆசிரியர்களின் மத்திய அரசுக்கு இணையான ஊதியத்தை புறந்தள்ளிய ஊதியக் குழு அரசாணைகளான 234 மற்றும் 303 ஐ உரியத் திருத்தங்கள் மேற்கொண்டால் மட்டுமே இடைநிலை ஆசிரியர்களுக்கு மீண்டும் மத்திய அரசுக்கு இணையான ஊதியம் சாத்தியம்.

ஆறாவது ஊதிய குழுவிற்குப் பிறகு நியமனம் பெறும் இடைநிலை ஆசிரியர்களுக்கு அடிப்படை ஊதிய மாக ஊதியக் கட்டு 5,200 – 20,200 தர ஊதியம் 2,800 என தீர்மானித்து விட்ட பிறகு மீண்டும் பெருக்கல் கூறுகளை நடை முறைப்படுத்த சொல்வது எந்த வகையிலும் ஏற்புடையது அல்ல. இது நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வதாகும். இது தொடர்பாக நீதிமன்றம் சென்றவர்கள் வழக்கின் முடிவுகள் தங்களுக்கு சாதகமாக அமையாது என்பதை தங்களது வழக்கறிஞர்கள் மூலம் அறிந்து கொண்டு நீதிமன்றத்தில் எங்களது கோரிக்கை சார்ந்து அரசிடம் பேசிக் கொள்கிறோம் என்ற நிகழ்வும் நடந்துள்ளது என்பதை மத்திய அரசு இணையான ஊதியத்தை இழந்த இடைநிலை ஆசிரியர்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும்.

மேலும், 2012, 2013, 2025 ஆண்டுகளில் நியமனம் பெற்ற இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான அடிப்படை ஊதியமாக ரூ35,400 என்பதற்கு பதிலாக அரசாணை 303-ன் படி இடைநிலை ஆசிரியர்களுக்கு அடிப்படை ஊதியமாக ரூ20,600 என என கடைநிலை ஊழியர்களின் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய இழப்பை முதலீடாக்கி இடைநிலை ஆசிரியர்கள் இடையே பிளவை ஏற்படுத்தாமல் அனைவரும் ஒன்று இணைந்து போராடிப் பெற்ற மத்திய அரசுக்கு இணையான ஊதியம் என்ற முழக்கத்தை நெஞ்சில் ஏந்தி இடைநிலை ஆசிரியர்களின் அடிப்படை ஊதிய விகிதத்தை மத்திய அரசுக்கு இணையான அடிப்படை ஊதிய விகிதமாக மாற்றுகின்ற போராட்டக் களங்களை வடிவமைத்து மத்திய அரசு 8-வது ஊதியக்குழுவை அமல் படுத்துவதற்கு குழு அமைக்கப் பட்டுள்ள நிலையில், இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியத்தை மீட்டெடுக்க எத்தகைய தியாகத்திற்கும் தயாராவோம்.

இங்கு அடிப்படை மாறாமல் எதுவும் மாறாது. மத்திய அரசு அமல்படுத்த உள்ள 8-வது ஊதிய குழுவைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில் புதிய ஊதிய குழு நடைமுறைப் படுத்துவதற்கு முன்பாக இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசு இணையான ஊதியத்தை உறுதி செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.


எனவே, தமிழ்நாட்டு இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் என்பதே சர்வ ரோக நிவாரணி என்பதை அனைவரும் உணர வேண்டும், என
தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி மதுரை மாவட்டச் செயலாளர்
சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *