தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420
குண்டடம் புறவழிச்சாலையில் கோர விபத்து – இருசக்கர வாகன ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே பலி சிசிடிவி கேமரா ஆய்வு.
தொடரும் விபத்துகள் : வேகத்தடை, வேகக் கட்டுப்பாட்டு கருவிகள் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை
திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அருகே குண்டடம் பவர் ஹவுஸ் புறவழிச்சாலை பகுதியில் இன்று நடைபெற்ற சாலை விபத்தில், இருசக்கர வாகனத்தில் சென்ற ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
வெள்ளநத்தம், பல்லடம், கங்கனாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்த அருணாச்சலம் மகன் கே.ஏ. ராஜேந்திரன் என்பவர், எக்ஸெல் 100 இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது அதே வழியாக வந்த டாடா எஸ் (Tata Ace) சரக்கு வாகனம், இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் நிலைதடுமாறி சாலையில் கீழே விழுந்த ராஜேந்திரன், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
விபத்து குறித்து தகவல் அறிந்த குண்டடம் காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, ராஜேந்திரன் உடலை கைப்பற்றி தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மருத்துவ குழுவினர், இ.சி.ஜி. (ECG) மூலம் பரிசோதனை செய்து, அவர் ஏற்கனவே உயிரிழந்ததை உறுதி செய்தனர்.
இதனையடுத்து குண்டடம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில், ராஜேந்திரன் வெள்ளநத்தம் பகுதியில் இருந்து குண்டடம் பகுதியில் உள்ள மளிகை கடைக்கு அத்தியாவசியப் பொருட்கள் வாங்குவதற்காக இருசக்கர வாகனத்தில் புறவழிச்சாலை வழியாக சென்ற போது இந்த விபத்து ஏற்பட்டது என்பது தெரிய வந்துள்ளது.
இந்த விபத்து தொடர்பாக, டாடா எஸ் வாகன ஓட்டுநர் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும், அப்பகுதியில் அடிக்கடி சாலை விபத்துகள் நிகழ்ந்து வருவதால், உடனடியாக வேகத்தடைகள் அமைக்க வேண்டும், வேகக் கட்டுப்பாட்டு கருவிகள் மற்றும் எச்சரிக்கை பலகைகள் பொருத்தப்பட வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்தி கோரிக்கை வைத்துள்ளனர்.
இது தொடர்பாக குண்டடம் காவல்துறையினர் ராஜேந்திரன் மீது மோதி விட்டுச் சென்ற டாட்டா எஸ் வாகனம் யாருடையது என அருகில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.