புழல் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 70 சவரன் நகை ஒன்றரை கிலோ வெள்ளி ஐம்பதாயிரம் பணத்தை கொள்ளையடித்த மூவர் கைது
நகைகள் பறிமுதல்.
புழல் சூரப்பட்டு ரோடு வி .எம். கே .நகர் மூன்றாவது தெருவை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன்( வயது 56 ) இவர் சென்னை கோஷா மருத்துவமனையில் மருத்துவ உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். அவரது மனைவி ஹேமாவதி (வயது 52 ) இவர் நுங்கம்பாக்கத்தில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர்.
இந்நிலையில் தனது மகளுக்கு திருமணம் நிச்சயமாகி திருமணம் நடக்க இருக்கின்றபடியால் விசாகப்பட்டினத்தில் உள்ள தனது கணவரின் அம்மாவை சந்திக்க தனது வீட்டை பூட்டிக்கொண்டு கடந்த 17ஆம் தேதி அன்று மாலை சென்றுவிட்டு 20 ம் தேதி அன்று விசாகப்பட்டதிலிருந்து சென்னை வந்த அவர்கள் வீட்டுக்கு திரும்பி வந்து பார்த்த போது வீட்டில் முன்பக்க கிரில்கேட் உடைக்கப்பட்டு உள்ளே பீரோவில் இருந்த 70 சவரன் நகை 1.5 கிலோ வெள்ளி ஐம்பதாயிரம் பணம் ஆகியவை கொள்ளை போயிருந்தது.
இதுகுறித்து புழல் காவல் நிலைய குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் முபாரக் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தார் . இதற்கிடையில் குற்றவாளிகளை விரைந்து பிடிக்க கொளத்தூர் காவல் மாவட்ட துணை ஆணையாளர் பாண்டியராஜன் உத்திரவிட்டத்தின் பேரில் புழல் சரக உதவி கமிஷனர் சகாதேவன் தலைமையில் காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் முபாரக் மற்றும் மாதவரம் குற்ற பிரிவு ஆய்வாளர் ராஜன் மற்றும் உதவி ஆய்வாளர் சிவசங்கரன் மற்றும் தனிப்படை போலீசார் அருகில் உள்ள சிசிடிவி கேமராக்களின் பதிவுகளை வைத்து குற்றவாளியை தேடி வந்தனர்.
புழல் கொளத்தூர் செங்குன்றம் சோழவரம் பாடி வில்லிவாக்கம் ஆகிய இடங்களில் உள்ள
சுமார் 200 க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளை வைத்து குற்றவாளியை தீவிரமாக தேடி வந்த நிலையில்
பாடி மேம்பாலம் அருகே பதுங்கி இருந்த மூன்று இளைஞர்களை கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டதில் ,அம்பத்தூர் எஸ்டேட் பகுதியை சேர்ந்த சிவா என்கின்ற வண்டு (வயது 21 ) செங்குன்றம் அடுத்த எடப்பாளையம் பகுதியை சேர்ந்த தினேஷ் (வயது 20) பல்லாவரம் பகுதியை சேர்ந்த சூர்யா (வயது 19) என்பவர்கள் இரவு நேரங்களில் பூட்டி இருக்கும் வீடுகளை நோட்டமிட்டு யாரும் இல்லாத நேரங்களில் பூட்டை உடைத்து திருடுபவர்கள் என தெரியவந்தது.
மேலும் ஆசிரியை ஹேமாவதி வீட்டில் கொள்ளை அடித்ததில் 29 சவரன் மட்டுமே தங்கநகை என்பதும் மீதமுள்ளவை கவரிங் நகைகள் என்பது தெரியவந்தது . இவர்கள் திருடிய பணத்தையும் நகையையும் பள்ளம் தோண்டி புதைத்து வைத்திருந்ததாக கூறப்படுகிறது.
பின்னர் இவர்கள் மூவரையும் கைது செய்து இவர்களிடம் இருந்த இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்து அவர்களிடம் இருந்து 29 சவரன் தங்க நகையும் பறிமுதல் செய்த புழல் காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் முபாரக் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தார்.
நகைகளை பறிகொடுத்த ஆசிரியை ஹேமாவதி தன் மகளுக்கு திருமணம் நடக்க இருந்த நிலையில் நகைகள் காணாமல் போனதால் கலக்கத்தில் இருந்த அவர் நகைகள் திரும்ப கிடைக்கப்பெற்றதை அறிந்து மகிழ்ச்சியடைந்தார்.
போலீசுக்கு பெரும் சவாலாக விளங்கிய இந்த வழக்கில் இரவு பகல் பாராமல் தீவிரமாக குற்றவாளியை பிடித்த தனிப்படை போலீசாரை காவல் உயர் அதிகாரிகள் வெகுவாக பாராட்டியது குறிப்பிடத்தக்கது.