பெரம்பலூர்.ஜன.07. தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலுக்கிணங்க, பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டத்திற்குட்பட்ட கொளக்காநத்தம் பகுதியில் ரூ.1 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் பணி முன்னேற்ற நிலை குறித்து போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சிவசங்கர் அவர்கள் மற்றும் உயர்கல்வித் துறை அமைச்சர் முனைவர் கோவி. செழியன் அவர்கள் ஆகியோர் மாவட்ட ஆட்சித்தலைவர் மிருணாளினி தலைமையில் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
இந்நிகழ்வில், பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன், ஆலத்தூர் முன்னாள் ஒன்றியக்குழுத்தலைவர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கொளக்காநத்தத்தில் குன்னம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும், போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சருமான சிவசங்கள் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து வழங்கிய ரூ.1 கோடி மதிப்பில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்காக கட்டப்பட்டுவரும் புதிய கட்டடங்களின் பணி முன்னேற்றம் குறித்து பார்வையிட்ட அமைச்சர் பெருமக்கள், பிறகு தற்காலிகமாக கொளக்காநத்தம் அரசுப்பள்ளியில் நடைபெற்றவரும் அரசு கலை அறிவியல் கல்லூரியில் மாணவ மாணவிகள் மற்றும் பேராசிரியர்களின் வருகைப்பதிவேடுகள், வகுப்பறைகள் உள்ளிட்டவைகளை பார்வையிட்டு மாணவ மாணவிகளுடன் கலந்துரையாடினர்.
அப்போது, உயர்கல்வித்துறை அமைச்சர் தெரிவித்ததாவது
தமிழ்நாடு முதலமைச்சர் 2025-26ஆம் கல்வியாண்டிற்கு தமிழ்நாட்டில் 15 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் கட்டப்படும் என சட்டப்பேரவையில் அறிவித்தார்கள். அதில் பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டத்திற்குட்பட்ட கொளக்காநத்தம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியும் ஒன்றாகும்.
கொளக்காநத்தம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2024-25ஆம் ஆண்டிற்கான தற்காலிக வகுப்புகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த கல்வி ஆண்டில், வணிகவியல், கணினி அறிவியல், உயிர்தொழில்நுட்பவியல், பொருளாதாரம் மற்றும் அரசியல் அறிவியல் உள்ளிட்ட 5 பாடப்பிரிவுகளுடன் தொடங்கப்பட்ட இந்தக் கல்லூரியில், 280 மாணவ மாணவிகள் பயிலும் வகையில் இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கல்லூரிக்கான முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் என 6 பேராசிரியர்களும், 5 அலுவலகப் பணியாளர்களும் என 11 பணியிடங்கள் முதற்கட்டமாக தோற்றுவிக்கப்பட்டுள்ளது. தற்போது, 35 மாணவர்களும், 35 மாணவிகளும் என மொத்தம் 70 பேர் இங்கு பயின்று வருகின்றீர்கள்.
தமிழ்நாட்டு மாணவ மாணவிகள் அனைவரும் தவறாமல் படிக்க வேண்டும்,
கல்வியில் சிறந்து விளங்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பல திட்டங்களை வழங்கி வருகின்றார்கள். இந்தியாவிலே அதிக அளவில் உயர்கல்விப் பயில்வோர் உள்ள மாநிலமாக நமது தமிழ்நாட்டை திகழச்செய்தவர் தமிழ்நாடு முதலமைச்சர் .
நம் முதலமைச்சர் மாணவ மாணவிகளை நோக்கி, “ படிங்க, படிங்க, படிங்க.. உங்களைப் பார்த்துக்கொள்ள நான் இருக்கின்றேன். உங்கள் குடும்பத்தைப் பார்த்துக்கொள்ள நம் அரசு இருக்கின்றது” என பெருமை பொங்க தெரிவித்துள்ளார். எந்தக்காரணத்திற்காகவும் மாணவ மாணவிகள் கல்வி பயில்வதில் இடர்பாடு வந்துவிடக்கூடாது என்பதற்காக தமிழ்ப்புதல்வன், புதுமைப்பெண் என பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றார்கள்.
மேலும், மாநிலத்தின் அனைத்துப்பகுதிகளிலும் அரசு கல்லூரிகளை அமைத்து வருகின்றார்கள். கல்லூரி இறுதியாண்டு பயிலும் மாணவ மாணவிகளுக்கு மடிக்கணினிகளை முதலைமைச்சர் வழங்கியுள்ளார்கள். அரசின் திட்டங்களை நீங்கள் அனைவரும் நல்லமுறையில் பயன்படுத்திக்கொண்டு நன்கு படித்து சமுதாயத்தில சிறந்தவர்களாக உருவாக வேண்டும் என வாழ்த்துகின்றேன்.
இவ்வாறு தெரிவித்தாலர்.
இந்நிகழ்வுகளில், அட்மா தலைவர் ஜெகதீசன், கல்லூரி முதல்வர் கண்ணதாசன் மற்றும் அரசு அலுவலர்கள், கல்லூரி பேராசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.