பா வடிவேல் அரியலூர் செய்தியாளர்
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் நகரில் போக்குவரத்து விதிகள் குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்தும் வகையில், ஜெயங்கொண்டம் போக்குவரத்து காவல்துறை சார்பில் சிறப்பான போக்குவரத்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சி, ஜெயங்கொண்டம் பாத்திமா பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு அரியலூர் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஆர். முத்தமிழ்செல்வன் தலைமை தாங்கி கலந்து கொண்டு, போக்குவரத்து விதிகளை கடைப்பிடிப்பதன் அவசியம் குறித்து பொதுமக்களிடம் எடுத்துரைத்தார்.
அவர் பேசுகையில்,
“இருசக்கர வாகனங்களில் பயணிக்கும் அனைவரும் கட்டாயமாக தலைக்கவசம் அணிய வேண்டும். இது சட்டத்திற்காக மட்டுமல்ல, உயிர் பாதுகாப்பிற்காகவும் மிகவும் அவசியம். போக்குவரத்து விதிகளை பின்பற்றுவது விபத்துகளை குறைக்கும்” என தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, தலைக்கவசம் அணிந்து விதிகளை முறையாக பின்பற்றி வந்த இருசக்கர வாகன ஓட்டிகளை காவல்துறை சார்பில் பாராட்டி, அவர்களுக்கு மரக்கன்றுகள் மற்றும் இனிப்புகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
இந்த நடவடிக்கை பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.
இந்த நிகழ்ச்சியில் ஜெயங்கொண்டம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் மதிவாணன் உள்ளிட்ட போக்குவரத்து காவலர்கள் பலரும் கலந்து கொண்டு, வாகன ஓட்டிகளுக்கு போக்குவரத்து விதிகள் குறித்த துண்டுப் பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இந்த போக்குவரத்து விழிப்புணர்வு நிகழ்ச்சியின் மூலம், பொதுமக்கள் மத்தியில் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு மேலும் அதிகரித்தது குறிப்பிடத்தக்கது.