பரமத்தி வேலூர், ஜன.9-
கபிலர்மலை அருகே வீட்டு மின் இணைப்பு வேண்டி மனுக்கொடுத்தும் 9 மாதமாக மின் இணைப்பு வழங்காததை கண்டித்து கபிலர்மலை துணை மின் நிலையத்தை இளம் விவசாயிகள் சங்கத்தினர் முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா கபிலர்மலை காந்திநகரை சேர்ந்த விவசாயி சந்திரசேகரன் வீட்டிற்கு மின் இணைப்பு வழங்கக்கோரி கடந்த 9 மாதத்திற்கு முன்பு மனு கொடுத்து இருந்தார்.
பிலர்மலை துணை மின் நிலைய அதிகாரிகள் 9 மாதத்திற்க்கு மேல் ஆகியும் மின் இணைப்பு வழங்கவில்லை. இது குறித்து மின்வாரிய அலுவலர்களிடம் கேட்ட போது உரிய பதில் அளிக்கவில்லை. இந்த நிலையில் கபிலர்மலை உதவி மின் பொறியாளர் அலுவலகத்தை இளம் விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் செளந்தரராஜன் தலைமையில் ஏராளமான விவசாயிகள் முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தகவல் அறிந்து அங்கு வந்த பரமத்திவேலூர் மின்வாரிய செயற்பொறியாளர் வரதராஜன் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தினார்.
பேச்சுவார்த்தையில் மீண்டும் மின் இணைப்பு வழங்கப்படும் என உறுயளித்ததை தொடர்ந்து விவசாயிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர். அதை தொடர்ந்து பரமத்தி வேலூர் மின் வாரிய செயற்பொறியாளரின் உத்தரவின் பேரில் மின்வாரிய உதவி பொறியாளர் சம்பந்தப்பட்ட வீட்டிற்கு சென்று மறு ஆய்வு செய்தார் .
பின்னர் அந்த வீட்டிற்கு மின் இணைப்பு கொடுத்தனர்.போராட்டத்தில் இளம் விவசாய சங்க பொருளாளர் சுரேஷ்ராஜ், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் இளவரசன் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. ஜேடர்பாளையம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.