திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் தாலுக்காவில் உள்ள 71 வருவாய் கிராமங்கள் குடமுருட்டி ஆறு, வெட்டாறு, வெண்ணாறு மற்றும் முக்கிய பாசன வடிகால் ஆறான சுள்ளான் ஆறு மூலம் பாசன வசதி பெறுகின்றன.
வலங்கைமான் தாலுக்காவில் உள்ள 50 கிராம ஊராட்சிகளில் அறநிலையத் துறைக்கு சொந்தமான குளங்கள், கிராம ஊராட்சிகளுக்கு சொந்தமான குளங்கள் மற்றும் தனியாருக்கு சொந்தமான குளங்கள் என ஆயிரத்திற்கு மேற்பட்ட குளங்கள் உள்ளன.
இவை நீங்கலாக, பல்வேறு காலகட்டங்களில் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் மூலம் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் மற்றும் வேளாண்மை பொறியியல் துறையின் மூலம் நூறு சதவீத மானியத்தில் நிலத்தடி நீரை பாதுகாத்திடவும், மீன் வளர்ப்பு செய்து வருவாய் ஈட்டிடும் வகையில் பண்ணை குட்டைகள் அமைத்து தரப்பட்டுள்ளது.
டெல்டா மாவட்டங்களின் பாசனத்திற்கு மேட்டூர் அணை உரிய நேரத்தில் திறக்கப்பட்டது. இருப்பினும் டெல்டா மாவட்டங்களில் உள்ள குளங்கள் உள்ளிட்டவைகள் நிரம்ப வில்லை, இந்நிலையில் வடகிழக்கு பருவமழை துவக்க நிலையிலே குளம் உள்ளிட்ட அனைத்து நீர் நிலைகளும் நிரம்பின. இதனை அடுத்து மீன் வளர்ப்போர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.