ராஜபாளையம் அருகே தேவதானம், அரசு தென்னை நாற்றுப்பண்ணையில் தென்னங்கன்றுகள் விற்பனைக்கு!
விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் வட்டாரம், கோவிலூர் கிராமத்தில் ராஜபாளையம் – தென்காசி நெடுஞ்சாலையில் அரசு தென்னை நாற்றுப்பண்ணை அமைந்துள்ளது.
இப்பண்ணை 1957 ம் வருடம் ஆரம்பிக்கப்பட்டு தரமான கன்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு விவசாயிகளுக்கு நேரடியாகவும், மானியமாகவும் தென்னை நாற்றுக்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.1992 முதல் தென்னை ஒட்டு மையம் துவங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.
அரசு தென்னை நாற்றுப்பண்ணை மற்றும் தென்னை ஒட்டு மையம் ஆகியவை வேளாண்மை துறை கட்டுப்பாட்டில் இருந்து தோட்டக்கலை – மலை பயிர்கள் துறை கட்டுப்பாட்டின் கீழ் 01.12.2023 அன்று முதல் கொண்டுவரப்பட்டது.
இப்பண்ணையில் நெட்டை ரகத்துடன் 1992 முதல் நெட்டை X குட்டை ரகங்களும், 2004 முதல் குட்டை X நெட்டை ரகங்களும் உற்பத்தி செய்யப்பட்டு விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
நெட்டை X குட்டை தென்னை ரகம் விரைவில் பூப்பூக்கும் தன்மை வீரிய வளர்ச்சி அதிக மகசூல், தரமான கொப்பரைகள் மற்றும் அதிக எண்ணெய் தன்மை கொடுக்கக் கூடியது.
குட்டை X நெட்டை ரகம் விரைவில் பூப்பூக்கும் தன்மை மற்றும் அதிகமாக மகசூல் கொண்டதுடன் இளநீருக்கும் பயன்படுகிறது.
தேவதானம் அரசு தென்னை நாற்றுப் பண்ணையில் நல்ல தரமான 17,615 எண்ணம் நெட்டை ரக கன்றுகளும், 9808 எண்ணம் நெட்டை X குட்டை ரக கன்றுகளும் மற்றும் 719 எண்ணம் குட்டை X நெட்டை ரகங்களும் தோட்டக்கலை துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் மூலமாகவும் நேரடி விற்பனைக்கும் விநியோகம் செய்ய தயார் நிலையில் உள்ளன.
நெட்டை ரகம் 1 கன்றின் விலை ரூ.60/-க்கும், நெட்டை X குட்டை ரகம் 1 கன்றின் விலை ரூ.125/-க்கும், மற்றும் குட்டை X நெட்டை ரகம் 1 கன்றின் விலை ரூ.300/-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தென்னங்கன்றுகள் தேவைப்படும் விவசாயிகள் தங்கள் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தையும் அல்லது தேவதானம், அரசு தென்னை நாற்றுப் பண்ணையினையும் தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ளலாம் என ராஜபாளையம் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் ரா. முத்துலட்சுமி தெரிவித்துள்ளார்