தென்காசி மாவட்டத்தில் கிராமப்புற அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கான தமிழக முதல் அமைச்சரின் காலை உணவு திட்டத்திற்கான முன்னேற்பாடு கூட்டம் தென்காசி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி கலை அரங்கத்தில் நடைபெற்றது.
தென்காசி மாவட்டத்தில் உள்ள 10 ஒன்றியங்களைச் சார்ந்த 358 பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மற்றும் 358 பள்ளி நிர்வாகிகளுக்கும் தென்காசி மாவட்ட ஆட்சியரின் வழிகாட்டுதல் படி கூட்டம் நடைபெற்றது.
மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் (பொ) கண்ணன் இந்த நிகழ்விற்கு தலைமை தாங்கினார்.தென்காசி வட்டாரக் கல்வி அலுவலர் இளமுருகன் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் மாவட்ட கல்வி அலுவலர் கண்ணன் பேசும் போது பொருட்கள் பாதுகாப்பு அறை மற்றும் அனைத்து வகை சமையல் கூடமும் மின்சாரம் மற்றும் தண்ணீர் வசதியுடன் இருக்க வேண்டும் எனக் கூறினார்.
மேலும் அனைத்து குழந்தைகளுக்கும் தட்டுகள் மற்றும் டம்ளர்கள், பள்ளிகளுக்கு தேவையான விளம்பர பதாகைகள் தயார் செய்து வைத்துகொள்ள வேண்டும் என தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் கடையம் வட்டாரக் கல்வி அலுவலர் குருசாமி, கடைய நல்லூர் வட்டாரக் கல்வி அலுவலர்கள் மகேஷ்வரி, முத்துலிங்கம், தென்காசி மகளிர் திட்ட அலுவலர், மற்றும் 358 பள்ளிகளைச் சார்ந்த தலைமை ஆசிரியர்கள் , பள்ளி நிர்வாகிகள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.