கோவை வி.எல்.பி. ஜானகியம்மாள் கல்லூரியில் நடைபெற்ற ‘கிராமிய பொங்கல் 2026’ விழா, தமிழர் பாரம்பரியத்தை உயிர்ப்பிக்கும் வகையில் கோலாகலமாக நடைபெற்றது.

கோவை மாவட்டம் கோவைபுதூர் பகுதியில் செயல்பட்டு வரும் வி.எல்.பி. ஜானகியம்மாள் கல்லூரி மற்றும் அலையன்ஸ் கிளப் ஆஃப் கோயம்புத்தூர் சேரன் மாவட்டம் 250s ஆகியோர் இணைந்து பொங்கல் விழாவை கல்லூரி வளாகத்தில் சிறப்பாக நடத்தினர்.

தமிழர் மரபை பிரதிபலிக்கும் வகையில் கல்லூரி வளாகமே ஒரு பாரம்பரிய கிராமமாக வடிவமைக்கப்பட்டு விழா நடைபெற்றது.விழாவிற்கு கல்லூரியின் தலைமை நிர்வாக அதிகாரியும் செயலருமான ஜெய்ஸ்ரீ சூர்யகுமார் தலைமை தாங்கினார். அவர் தனது தலைமையுரையில், தமிழர் பாரம்பரிய விழாக்களின் முக்கியத்துவத்தை மாணவர்கள் உணர்ந்து, அதை தலைமுறை தலைமுறையாகப் பாதுகாக்க வேண்டும் என வாழ்த்தினார். முதல்வர் முனைவர் கலைவாணி மற்றும் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநர் முனைவர் பிருந்தா ஆகியோர், இத்தகைய விழாக்கள் மாணவர்களிடையே பண்பாட்டு மதிப்புகளையும் சமூக உணர்வையும் வளர்க்கும் என உரையாற்றினர்.

முன்னதாக, மண்பானையில் அடுப்பில் பொங்கல் வைத்து மாணவிகள் குலவையிட்டு மகிழ்ந்தனர். வேட்டி, சேலை போன்ற பாரம்பரிய உடைகளில் மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் பங்கேற்று விழாவிற்கு தனிச்சிறப்பு சேர்த்தனர்.

விழாவின் முக்கிய அம்சமாக காளை மாடுகள் பூட்டிய ரேக்ளா வண்டிகளில் நடைபெற்ற ரேக்ளா பந்தயத்தில் மாணவிகள் கலந்து கொண்டு அனைவரையும் கவர்ந்தனர். மேலும், தமிழர்களின் வீர மரபை எடுத்துக்காட்டும் இளவட்டக்கல் தூக்கும் போட்டி நடைபெற்றது.

தப்பாட்டம், கும்மி, ஓயிலாட்டம், சிலம்பாட்டம் போன்ற நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சிகள் விழாவை உற்சாகமாக்கின. உறியடித்தல், கயிறு இழுத்தல், கோலப்போட்டி, பொங்கல் தயாரித்தல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

மேலும், தொழில் முனைவு மேம்பாட்டு மையம் மற்றும் வி.எல்.பி.ஜே. தொழில் வளர்ப்பு மற்றும் தொடக்க நிறுவன மையம் சார்பில் அமைக்கப்பட்ட தொழில் முனைவோர் அரங்குகள் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்தன. பசுக்கள், மாட்டுவண்டி காட்சிப்படுத்தல்களும் தமிழர் பண்பாட்டை பிரதிபலிக்கும் வகையில் அமைக்கப்பட்டிருந்தன.

விழாவின் இறுதியில் டி.ஜே. யோயோவின் இசையுடன் கொண்டாட்டம் உச்சக்கட்டத்தை எட்டியது. அலையன்ஸ் கிளப் தலைவர் பிரபாகரன் மற்றும் கிளப் உறுப்பினர்கள் அல்லி ஸ்ரீனிவாசன், அல்லி ராஜன், அல்லி சுந்தரம், அல்லி மகாலட்சுமி, அல்லி கோபாலகிருஷ்ணன், அல்லி யுவராஜ், அல்லி முரளி உள்ளிட்டோர் மாணவர்களின் முயற்சிகளையும் உற்சாகத்தையும் பாராட்டினர்.

இந்த ‘கிராமிய பொங்கல் 2026’ விழா, மாணவர்களுக்கும் பேராசிரியர்களுக்கும் தமிழர் பண்பாட்டை நெருக்கமாக உணர வைத்த மறக்க முடியாத அனுபவமாக அமைந்தது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *