பா வடிவேல் அரியலூர் செய்தியாளர்
அரியலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம், கும்பகோணம் (லிமிடெட்), திருச்சிராப்பள்ளி மண்டலத்தின் சார்பில் ஜெயங்கொண்டம் பணிமனை வளாகத்தில் சமத்துவ பொங்கல் விழா சிறப்பாக நடைபெற்றது.
இந்த சமத்துவ பொங்கல் விழாவிற்கு மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் திரு. சா.சி. சிவசங்கர் அவர்கள் தலைமை தாங்கி விழாவை சிறப்பித்தார். விழாவின் ஒரு பகுதியாக, போக்குவரத்து கழகத்தில் பணிபுரியும் பணியாளர்களுக்கு பொங்கல் பரிசுகளை மாண்புமிகு அமைச்சர் அவர்கள் வழங்கினார்.
தொடர்ந்து நடைபெற்ற சமத்துவ பொங்கல் நிகழ்ச்சியில், போக்குவரத்து கழக பணியாளர்களுக்கும், அனைத்து தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கும் அமைச்சர் அவர்கள் நேரடியாக பொங்கல் வழங்கி, அனைவருடனும் இணைந்து சமத்துவம், சகோதரத்துவம் மற்றும் ஒற்றுமையை வெளிப்படுத்தினார். அரசு பணியாளர்களின் நலனில் தமிழ்நாடு அரசு எப்போதும் அக்கறை காட்டி வருவதாகவும், போக்குவரத்து துறையின் வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் தனது உரையில் குறிப்பிட்டார்.
இந்த நிகழ்ச்சியில் திருச்சிராப்பள்ளி மண்டல பொது மேலாளர் டி. சதீஷ்குமார் அவர்கள், துணை மேலாளர்கள் புகழேந்தி ராஜ், ராஜேந்திரன், ஜெயங்கொண்டம் கிளை மேலாளர் ரவி உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். மேலும், போக்குவரத்து கழக பணியாளர்கள், அனைத்து தொழிற்சங்க பிரதிநிதிகள் மற்றும் பலர் திரளாக பங்கேற்று விழாவை சிறப்பித்தனர்.
சமத்துவம், ஒற்றுமை மற்றும் சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் நடைபெற்ற இந்த சமத்துவ பொங்கல் விழா, பணியாளர்களிடையே மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தியது.