கும்பகோணத்தில் ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இடையேயான யோகாசனம் மற்றும் குழு நடன போட்டிகள் நடைபெற்றது.

கும்பகோணத்தில் விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு இடையேயான பல்வேறு போட்டிகள் ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம். அதுபோல இந்த ஆண்டும் கடந்த ஜூலை 28ம் தேதி 39ம் ஆண்டாக ஸ்ரீமாதா மெட்ரிகுலேஷன் பள்ளியில் முதற்கட்டமாக பல்வேறு போட்டிகள் துவங்கியது. ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி விழா குழு தலைவர் சந்திரபிரபு தலைமையில் தொடங்கிய இப்போட்டிகளில் கும்பகோணம் மாநகர மற்றும் ஒன்றிய பகுதிகளில் இயங்கிவரும் அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவ மாணவிகள் பங்கேற்ற ஒப்புவித்தல் போட்டி, கட்டுரை போட்டி, ஓவியப்போட்டி, வண்ணக்கோல போட்டி, பகவத்கீதை ஒப்புவித்தல், விஷ்ணு சகஸ்ரநாமம் ஒப்புவித்தல், பாட்டுப்போட்டி உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றது.

தொடர்ந்து இரண்டாம் கட்டமாக நேற்று 11ம் தேதி ஞாயிற்றுக்கிழமை ஸ்ரீசரஸ்வதி பாடசாலா அரசு உதவிபெறும் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் காலை 9 மணிக்கு 6 மற்றும் 8ம் வகுப்பு பயிலும் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்ற யோகாசன போட்டிகளும், மதியம் 2 மணிக்கு 4 மற்றும் 5ம் வகுப்பு பயிலும் 11 குழுவினர்கள் மற்றும் 3 மணிக்கு 6 முதல் 8ம் வகுப்பு பயிலும் 11 குழுவினர்கள் அடங்கிய 250க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கேற்ற குழு நடன போட்டிகளும் நடைபெற்றது. இந்த குழு நடன போட்டிகளில் பாரதமாதா, மீனாட்சி திருக்கல்யாணம், சப்த மாதாக்கள் உள்ளிட்ட பல்வேறு வேடங்கள் அணிந்து, தெய்வ பக்தி பாடல்கள் மற்றும் தேசபக்தி பாடல்களுக்கு மாணவ, மாணவிகள் கண் கவரும் உடைகள் அணிந்து நடனமாடி அசத்தினர். இதனைத்தொடர்ந்து வரும் ஆகஸ்ட் 18ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 9.30 மணி முதல் 11.30 மணி வரை எல்கேஜி, யூகேஜி மற்றும் 1ம் வகுப்பு பயிலும் மாணவ மாணவிகளுக்கு மாறுவேட போட்டியும், அன்று மதியம் 2 மணிக்கு 6 முதல் 12ம் வகுப்பு பயிலும் மாணவ மாணவிகளுக்கு பரதநாட்டிய போட்டியும் நடைபெற உள்ளது.

இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி விழா குழு செயலாளர் ருத்ரமணி மற்றும் அமைப்பு செயலாளர் வீரராகவன் ஆகியோர் செய்து வருகின்றனர். அமைப்பாளர் கண்ணன், பொருளாளர் ஸ்ரீதரன், ஒருங்கிணைப்பாளர்கள் ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் ஸ்ரீதர், ராஜ்குமார், ஆசிரியைகள் சக்ரவாணி, ரம்யா, பிருந்தா வீரராகவன் மற்றும் ஆலோசகர் திருப்பனந்தாள் எஸ்கேஎஸ்எஸ் கல்லூரி முதல்வர் டாக்டர் மோகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு போட்டிகளை நடத்தினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *