தமிழக அரசு பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருத்துவத்துறை சார்பில், நலம் காக்கும் சிறப்பு மருத்துவ முகாம் மானூர்பாளையம் RGM பள்ளி வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது. இம்முகாமை ஈஸ்வரசெட்டிபாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்தின் மருத்துவர் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.
காலை 11.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை நடைபெற்ற இந்த முகாமில், பொதுமக்களுக்கு பல்வேறு நோய்களுக்கான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, மருத்துவ நிபுணர்களால் சிகிச்சைகள் வழங்கப்பட்டன. தேவையான மருந்துகள் முழுமையாக இலவசமாக வழங்கப்பட்டதுடன், தொடர் சிகிச்சை அவசியமான நோயாளிகள் தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்த முகாமில் சுமார் 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு மருத்துவ பரிசோதனைகளைப் பெற்றனர். நிகழ்ச்சியின் முக்கிய அம்சமாக, ‘மக்களை தேடி மருத்துவம்’ திட்டத்தின் பயனாளிகளுக்கு மருந்துப் பெட்டகங்கள் வழங்கப்பட்டன. அதேபோல், மகப்பேறு தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்கள் வழங்கப்பட்டதுடன், முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் கீழ் காப்பீட்டு அட்டைகளும் வழங்கப்பட்டன.
இந்த முகாம், கிராமப்புற மக்களின் சுகாதார பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் நடத்தப்பட்ட ஒரு முக்கியமான பொதுநல நடவடிக்கையாக பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.