திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் அருகே சோனாப்பேட்டை கிராமத்தை சேர்ந்த காந்தி (50 ) என்பவர் அப்பகுதி மக்களிடம் கடன் கொடுத்து அதற்கு அடமானமாக அரசு ஆவணங்களான ரேஷன்கார்டு, ஆதார் அட்டை முதலான முக்கிய ஆவணங்களை பெற்றுக்கொண்டு வட்டிக்குமேல் வட்டிபோட்டு கந்துவட்டி கொடுத்து வருவதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து கந்துவட்டி ஆசாமி காந்தியால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் நீடாமங்கலம் காவல்துறையிடம் பலமுறை புகார் அளித்தும் காவல்துறையினர் காந்திக்கு ஆதரவாக இருந்துவருவதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
இத்தகைய சூழலில் சோனாப்பேட்டை கிராமத்தை சேர்ந்த சிவாஜியின் மனைவி இந்துமதி (55) விவசாய பணிக்காக கந்துவட்டிகாரர் காந்தியிடம் கடந்த 1 வருடத்திற்கு முன்பு ரூ.9 லட்சம் கடன் வாங்கி, அதற்கு உரிய வட்டி மற்றும் முதலுமாக சேர்த்து ரூ.20 லட்சத்தை காந்தியிடம் திருப்பி செலுத்தியுள்ளார்.
ஆனால் கந்துவட்டிகாரர் காந்தி இந்துமதியிடம் வட்டி பாக்கி 2 லட்சம் உள்ளதாக கூறி தொடர்ந்து தொந்தரவு செய்துவந்துள்ளார். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு காந்தியின் வீட்டிற்கு சென்ற இந்துமதி குடும்பத்தினர் முழுத்தொகையையும் செலுத்திவிட்டு கடன் பத்திரத்தை திரும்பக்கேட்டுள்ளனர் .
அதற்கு காந்தி இன்று தருகிறேன் நாளை தருகிறேன் என இழுக்கடித்துள்ளார். காந்தி ஊர்காரர்தானே என இந்துமதி குடும்பத்தினரும் அசாதாரனமாக இருந்துவிட்டனர்.
இந்நிலையில் இன்று காந்தி டிராக்டரை எடுத்துவந்து இந்துமதி வீட்டுக்கு சென்று அவரது குடும்பத்தினரை தகாத வார்த்தைகளால் திட்டியதோடு, கொலை செய்யும் நோக்கத்தோடு தனது டிராக்டரை கொண்டு இந்துமதியின் மருமகன் வாங்கிய கார் மீது வேண்டுமென்றே மோதி சேதம் ஏற்படுத்தியதோடு, அங்கு நின்றுகொண்டிருந்த இந்துமதி மீது வேகமாக டிராக்டரை ஓட்டி மோதி கொலை செய்துவிட்டு தப்பி சென்றுள்ளார்.
இக்கொலை சம்பவம் குறித்து தகவல் அறிந்த நீடாமங்கலம் காவல்துறையினர் விரைந்து சம்பவ இடத்திற்கு வந்து இந்துமதியின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக மன்னார்குடி அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள நீடாமங்கலம் காவல்துறையினர் டிராக்டரை ஏற்றி கொலை செய்து தப்பியோடிய காந்தியை தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர். கந்துவட்டி ஆசாமியின் அடாவடிதனத்தை கண்டுகொள்ளாத நீடாமங்கலம் காவல்துறையின் அலட்சியபோக்கால் நடந்துள்ள கொலை அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் பற்றி விசாரணை செய்யும்போது இந்துமதியின் வீட்டின் அருகே , எதிரே உள்ளவர்கள் கூட நாங்கள் வெளியூர்காரர்கள் இதுபற்றி தங்களுக்கு ஏதும் தெரியது என தெரிவிக்கின்றனர். இறுதியில்தான் தெரியவந்தது. சோனாப்பேட்டை பகுதியில் உள்ள 90 சதவிகிதத்தினர் காந்தியிடம் வட்டிக்கு பணம் வாங்கியுள்ளனர் .
இச்சம்பவம் பற்றிய விபரங்களை தெரிவித்தால் தங்களது உயிருக்கும் தனது குடும்பத்திற்கும் பெரும் அளவில் ஆபத்து வந்துவிடும் என அஞ்சிகின்றனர்.