கலை கட்டிய வள்ளி கும்மியாட்டம் – வண்ண உடைகளுடன் பெண்கள், குழந்தைகளின் வியப்படைய செய்த நடனம்…
கோவையில் நடைபெற்ற வள்ளி கும்மியாட்டம் அரங்கேற்ற விழாவில் நாட்டுப்புறப் பாடலுக்கு ஏற்ப பெண்கள் குழந்தைகள் ஒரு சேர நடனம் ஆடியது காண்போரை வெகுவாக கவர்ந்தது….
கொங்கு மண்டலத்தில் பண்டைய காலத்தில் இருந்து மிகவும் பிரபலமான பாரம்பரியமிக்க நாட்டுப்புற கலையான வள்ளி கும்மியாட்டம் பல்வேறு விழாக்களில் ஆடப்பட்டு வருகிறது.இந்நிலையில் கோவை மற்றும் அதன் சுற்று வட்டார கிராமங்களில் கடந்த சில ஆண்டுகளாக ஆதி முருகன் வள்ளி கும்மியாட்டம் குழுவினர் சார்பில் பல்வேறு கிராமங்களுக்கு சென்று இலவசமாக வள்ளி கும்மியாட்ட கலையை கற்றுக் கொடுத்து வருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக பயிற்சி முடித்த ஆதி முருகன் வள்ளி கும்மியாட்ட கலைஞர்களின் குடும்ப விழா மற்றும் அரங்கேற்றம் நிகழ்ச்சி கோவை சேரன்மாநகர் பகுதியில் நடைபெற்றது.திறந்தவெளி மைதானத்தில் நடைபெற்ற இதில் 200க்கும் மேற்பட்ட பெண்கள் ஒரே வண்ண சீருடை அணிந்து நாட்டுப்புற பாடலுக்கு ஏற்றார் போல் ஒரு சேர நடனம் ஆடியது காண்போரை வெகுவாக கவர்ந்தது.
இதுகுறித்து நடன ஆசிரியர்கள் கூறுகையில், இக்கலை குடும்ப உறவுகளை மேம்படுத்தும் பயிற்சியாக இருப்பதாகவும், இதில் ஆறு வயது சிறுமியர் முதல் 60 வயது உள்ள பெண்கள் ஆர்வமுடன் கற்று வருவதாகவும், இக்கலை மீதான ஆர்வம் அனைவரிடத்திலும் அதிகரித்து வருவதாகவும் தெரிவித்தனர். மேலும் இது குறித்து நடன கலைஞர் சிறுமி கூறுகையில், வள்ளி கும்மி கலை மிகச்சிறந்த உடற்பயிற்சியாகவும், மனதை ஒருமுகப்படுத்தும் தியானப் பயிற்சியாகவும் உள்ளதாக தெரிவித்தார்.