பாம்பன் புதிய ரயில் பாலத்தின் மையப் பகுதியில் கப்பல்கள் வந்து செல்லும் வகையில் அமைக்கப்பட்ட இரும்பாலான இணைப்புப் பகுதியை (கர்டர்) 17 மீ. உயரத்துக்கு தூக்கி நடத்தப்பட்ட சோதனை வெற்றி பெற்றதாக ரயில்வே பொறியாளர்கள் தெரிவித்தனர்.

ராமநாதபுரம்மாவட்டம், மண்டபம் – ராமேஸ்வரம் தீவுப் பகுதியை இணைக்கும் வகையில் பாம்பன் ரயில்வே பாலம் அமைக்கப்பட்டு, 1914-ஆம் ஆண்டு முதல் ரயில் போக்குவரத்து தொடங்கியது. 106 ஆண்டுகள் கடந்த நிலையில் இந்தப் பாலம் சேதமடைந்ததால், ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

இதையடுத்து, கடந்த 2019-ம் ஆண்டு ரூ.550 கோடியில் புதிய ரயில் பாலம் கட்டுமானப் பணிகள் தொடங் கின. இந்தப் பணிகள் 99 சதவீதம் நிறை வடைந்த நிலையில், புதிய பாலத்தில் ரயில் சோதனை ஓட்டம் அண்மையில் நடைபெற்றது.

இப்பாலத்தின் மையப் பகுதியில் கப்பல்கள் வந்து செல்லும் போது தூக் கும் வகையில் இரும்பாலான இணைப்புப் பகுதி 630 டன் எடையில் அமைக் கப்பட்டது. இதை 17 மீ. உயரம் வரை தூக்கி, இறக்கும் வகையில் 250 கிலோ வாட் மோட்டார் இருபுறங்களிலும் பொருத்தப்பட்டது. இதனுடன் 650 கே.வி. மின்னாக்கியும் (ஜெனரேட்டர்)
இணைக்கப்பட்டது.

இந்நிலையில், பாம்பன் புதிய ரயில் பாலத்தில் பொருத்தப்பட்ட இரும்பாலான இணைப்புப் பகுதியை தூக்கி, இறக்கி சோதனை செய்யும் பணி தொடங்கியது. இந்த இணைப்புப் பகுதியை அங்குலம், அங்குலமாக தூக்கும் பணியில் ரயில்வே பொறியாளர்கள் ஈடுபட்டனர். இந்த இணைப்புப் பகுதி பாம்பன் புதிய ரயில் பாலத்தின் மையப் பகுதியில் 17 மீ. உயரம் வரை முதல் முறையாக தூக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, இந்த இணைப்புப் பகுதியை அங்குலம், அங்குலமாக கீழே இறக்கும் பணியில் பொறியாளர்கள் ஈடுபட்டனர்.
இந்த இரும்பாலான இணைப்புப் பகுதியை 17 மீ. உயரத்துக்கு தூக்கி, இறக்கி நடத்தப்பட்ட சோதனை வெற்றியடைந்ததையடுத்து, பொறியாளர்கள், தொழிலாளர்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *