கடலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில், லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழியினை மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார், தலைமையில் அனைத்துத்துறை அலுவலர்களும் ஏற்றுக்கொண்டனர்.
நேற்று மாவட்ட ஆட்சித்தலைவர் சி பி ஆதித்யா செந்தில்குமார் தலைமையில் கீழ்கண்டவாறு உறுதி மொழி எடுத்துக்கொள்ளப்பட்டது.
நேர்மை, வெளிப்படைத் தன்மை, ஊழலற்ற சமுதாயத்தினை உருவாக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் கடைசி வாரத்தில் லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு வாரத்தினை மத்திய மற்றும் மாநில அரசானது அறிமுகப்படுத்தி கடைபிடித்துவருகிறது. அதன் அடிப்படையில் இந்த ஆண்டு 28.10.2024 முதல் 03.11.2024 வரை கடைபிடிக்கப்படுகிறது.
“நமது நாட்டின் பொருளாதாரம், அரசியல் மற்றும் சமூக முன்னேற்றத்திற்கு ஊழல் ஒரு முக்கிய தடையாக உள்ளதாக நான் நம்புகிறேன். அரசு, குடிமக்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் ஆகியவை ஊழலை ஒழிப்பதற்கு ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என நான் நம்புகிறேன்.
நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் எப்போதும் உயர்ந்த நோக்குடன் விழிப்புணர்வு, நேர்மை மற்றும் கண்ணியம் ஆகியவற்றுடன் ஊழலை ஒழிப்பதில் உறுதுணையாக விளங்க வேண்டும் என்பதை நான் நன்கறிவேன்.
எனவே, நான் அனைத்து செயல்களிலும் நேர்மையாகவும், சட்ட விதிகளையும் பின்பற்றுவேன் என்றும், இலஞ்சம் வாங்கவோ அல்லது கொடுக்கவோ மாட்டேன் என்றும், அனைத்து செயல்களையும் நேர்மை மற்றும் வெளிப்படைத் தன்மையுடன் செயல்படுத்துவேன் என்றும், பொதுமக்களின் நலனுக்காக பணியாற்றுவேன் என்றும், தனிப்பட்ட நடத்தையில் நேர்மையை வெளிப்படுத்துவதில் ஒரு முன்னுதாரணமாக செயல்படுவேன் என்றும், ஊழல் தொடர்பான நிகழ்வினை உரிய அதிகார அமைப்பிற்குத் தெரியப்படுத்துவேன்“ என்ற உறுதிமொழி எடுத்துக்கொள்ளப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ம.இராஜசேகரன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்
(பொது) ரவி,மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் திருமதி லதா, உதவி ஆணையாளர் (கலால்) சந்திரகுமார், தனித்துனை ஆட்சியர் (ச.பா.தி.) திருமதி ரமா மற்றும் அனைத்துத்துறை அலுவல்கள் கலந்து கொண்டனர்.