கரூர் செய்தியாளர் மரியான் பாபு

கரூர் தான்தோன்றி மலை ஸ்ரீ கல்யாண வெங்கடரமண சுவாமி கோயில் கும்பாபிஷேகம்..

கரூரில் தென் திருப்பதி ஏழுமலையான் என அழைக்கப்படும் கரூர் தாந்தோன்றி மலை ஸ்ரீ கல்யாண வெங்கடரமண சுவாமி கோவிலில் நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில் பக்தர்கள் திரளாக பங்கேற்றனர். தென் திருப்பதி என்று அழைக்கப்படும் கரூர் தான்தோன்றி மலை கல்யாண வெங்கட ரமண சுவாமி கோயிலில் கும்பாபிஷேக விழா எனும் நூதன ஸ்வர்ண விமான ஜீர்ணோத்தாரண அஷ்ட பந்தன மகா ஸம்ப்ரோஷன திருக்குட நன்னீராட்டு விழா புதன்கிழமை காலை வெகு விமரிசையாக நடைபெற்றது.

முன்னதாக கும்பாபிஷேக விழா கடந்த 24ஆம் தேதி காலை 8 மணி அளவில் புண்யாயாஹம், மஹா பூர்ணாஹுதி பூஜைகளுடன் தொடங்கியது. தொடர்ந்து 25ஆம் தேதி காலையில் கோபூஜை, ப்ரவேச வே பலி, திவ்ய பிரபந்தம் ஆகியவை நடைபெற்றன. தொடர்ந்து 26 ஆம் தேதி அதிகாலை 5 மணியளவில் பக்தர்கள் காவிரி ஆற்றில் புனித நீர் எடுத்து ஊர்வலமாக கோயிலுக்கு வந்தனர்.

பின்னர் கோயிலில் ஆச்சரியான் அழைப்பு,அக்னி மதனம் யாகசாலை, மூர்த்தி ஹோமம் உள்ளிட்ட வழிபாடுகளும் இரவில் தீபாராதனையும் நடைபெற்றன. தொடர்ந்து 27 ஆம் தேதி காலை 8 மணி அளவில் புண்யாஹம், அஷ்டபந்தன பிரதிஷ்டை உக்தஹோமம், மகா சாந்தி ஹோமம் வழிபாடுகள் நடைபெற்றன. தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்ச்சியான கும்பாபிஷேகம் எனும் மகா சம்ரோக்ஷணம் காலை 9.45 மணிக்கு நடைபெற்றது. முன்னதாக காலை 9 மணி அளவில் கடன் புறப்பாடுடன் கலசங்கள் மற்றும் புனித தீர்த்தம் கோபுர கலசங்கள் உள்ள பகுதிக்கு கொண்டுவரப்பட்டது.

பின்னர் முன்னாள் அமைச்சரும்,கரூர் சட்ட மன்ற உறுப்பினருமான வி.செந்தில் பாலாஜி முன்னிலையில் பட்டாச்சாரியார்கள் வேத மந்திரம் முழங்க கோபுர கலசின் மீது புனித நீர் ஊற்றப்பட்டது. தொடர்ந்து பக்தர்கள் மீதும் புனித நீர் தெளிக்கப்பட்டது. மேலும் தமிழில் குடமுழுக்கு நடத்த வேண்டும் என கரூரைச் சேர்ந்த வழக்கறிஞர் தமிழ் ராஜேந்திரன் என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை வழக்கு தொடர்ந்ததால் தமிழிலும் வேத மந்திரங்கள் ஓத குடமுழுக்கு நடைபெற்றது.

இந்த குடமுழுக்கு விழாவில் கரூர் மாவட்ட ஆட்சியர் மீ.தங்கவேல், கரூர் மக்களவை உறுப்பினர் ஜோதிமணி, சட்டப்பேரவை உறுப்பினர்கள் மாணிக்கம், இளங்கோ, சிவகாமசுந்தரி, திமுகவினர் முன்னாள் எம்பி. கே.சி. பழனிச்சாமி, நன்னியூர் ராஜேந்திரன், வழக்கறிஞர் மணிராஜ், பரணி மணி, கரூர் முரளி, பள்ளப்பட்டி நகர் மன்ற தலைவர் முனைவர் ஜான், பல்லவி ராஜா, ராஜேந்திரன், எம்.எஸ்.கே கருணாநிதி,மேயர் கவிதா கணேசன், துணை மேயர் தாரணி சரவணன், மண்டல தலைவர் கோல்டு ஸ்பாட் ராஜா,எஸ்.பி.கனகராஜ் எம்.பாண்டியன், வி.கே. வேலுச்சாமி,உள்ளிட்ட கட்சியினரும் மற்றும் பக்தர்கள்,பொதுமக்கள் ஏராளமானோர் விழாவில் கலந்து கொண்டனர்.

விழாவில் பங்கேற்ற பக்தர்கள் அனைவருக்கும் துளசி தீர்த்தமும், அன்னதானமும் வழங்கப்பட்டது. மேலும் பக்தர்களின் வசதிக்காக கரூர் பழைய பேருந்து நிலையம் மற்றும் புதிய பேருந்து நிலையங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இலவசமாக இயக்கப்பட்டன. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கே. ஜோஸ் தங்கையா தலைமையில் 500க்கும் மேற்பட்ட போலீசார் காவல் பணியில் ஈடுபட்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *