நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா பரமத்தி அருகே மறவாபாளையம் அருந்ததியர் காலனியை சேர்ந்தவர் முருகன்( 50). இவர் பரமத்தி பேரூராட்சியில் தண்ணீர் எடுத்து விடும் வேலை செய்து வருகிறார்.இவரது மகன் பிரவீன்( 19). இவர் பரமத்தி வேலூரில் உள்ள அரசு உதவி பெறும் தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இவரும் இவரது நண்பர் பரமத்தி வேலூர் அருகே வெட்டுக்காட்டு புதூர் பகுதியைச் சேர்ந்த தங்கராசு மகன் கார்த்திராஜா( 19) என்பவரும் நேற்று இரவு கபிலர்மலை பாலசுப்ரமணிய சுவாமி கோவில் இரண்டாம் நாள் திருவிழாவிற்கு மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளனர் .
நள்ளிரவு வரை தேர்த்திருவிழாவில் இருந்த இவர்கள் இருவரும் நள்ளிரவு 2 மணி அளவில் கபிலர்மலையிலிருந்து வீட்டுக்கு செல்வதற்காக கபிலர்மலை– பரமத்தி செல்லும் சாலையில் அதிவேகமாக வந்து கொண்டிருந்தனர். மோட்டார் சைக்கிளை கார்த்திராஜா பைக் மெக்கானிக் ஓட்டி வந்தார். அவருக்கு பின்னால் பிரவீன் அமர்ந்திருந்தார்.அப்போது பரமத்தி போலீஸ் நிலையம் எதிரே உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வழியாக வந்தபோது நிலை தடுமாறி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி சுற்று சுவரில் திடீரென மோட்டார் சைக்கிள் மோதியதில் இருவரின் தலை சுற்றுச்சுவரில் பலமாக மோதிவிபத்து ஏற்பட்டது. இருவரும் மோட்டார் சைக்கிளுடன் கீழே விழுந்தனர் .
இருவரும் பலத்த காயங்களுடன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இது குறித்து தகவல் அறிந்த பரமத்தி போலீஸ் இன்ஸ்பெக்டர் இந்திராணி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு இருவரையும் பிரேத பரிசோதனைக்காக பரமத்தி வேலூர் அரசு மருத்துவமனை சவக்கிடங்கிற்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.