பெரம்பலூர்.பிப்.07. பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட சாரண சாரணியர் இயக்க கூட்ட அரங்கில் மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் (BBBP) திட்டத்தின் கீழ் குழந்தை திருமணம் இல்லாத மாவட்டத்தை உருவாக்கிடும் வகையில், கிராம அளவிலான குழந்தை திருமண தடுப்பு குழு உறுப்பினர்கள் மற்றும் தன்னார்வலர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ந.மிருணாளினி தலைமையில் நடைபெற்றது.

பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த ஓராண்டில் பெரம்பலூர் ஒன்றியத்தில் கவுள்பாளையம், எறையூர், கல்பாடி, துறைமங்கலம், வடக்குமாதவி, பொம்மனப்பாடி ஆகிய கிராமங்களிலும், ஆலத்தூர் ஒன்றியத்தில் தெரணி, கொளக்காநத்தம், திம்மூர், நொச்சிக்குளம், மேலமாத்தூர் ஆகிய கிராமங்களிலும், வேப்பூர் ஒன்றியத்தில் பேரளி, பரவாய், பெரியவெண்மணி, பெருமத்தூர், கீழப்பெரம்பலூர் ஆகிய கிராமங்களிலும், வேப்பந்தட்டை வட்டத்தில் அரும்பாவூர், நூத்தப்பூர், நெய்க்குப்பை, தேவையூர், பசும்பலூர் ஆகிய கிராமங்களிலும் குழந்தை திருமணங்கள் நடைபெற்றுள்ளது.

எனவே, குழந்தை திருமணத்தை தடுப்பதற்காக மாவட்ட ஆட்சித்தலைவர் ந.மிருணாளினி, அவர்களின் உத்தரவின் அடிப்படையில் மாவட்ட அளவிலான குழுக்கள், வட்டார அளவிலான குழுக்கள் மற்றும் கிராம அளவிலான குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
மாவட்ட அளவிலான குழுவில் வருவாய் கோட்டட்சியர், மகளிர் திட்ட இயக்குநர், மாவட்ட சமூக நல அலுவலர், ஒருங்கிணைந்த வளர்ச்சித்திட்ட அலுவலர், மாவட்ட சுகாதார அலுவலர், மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர், மாவட்ட வழங்கல் அலுவலர், ஊராட்சிகளுக்கான உதவி இயக்குநர், இந்தோ அறக்கட்டளை உறுப்பினர்கள் இடம்பெற்றுள்ளனர்.
வட்டார அளவிலான குழுவில் வட்டார வளர்ச்சி அலுவலர், மகளிர் திட்ட வட்டார இயக்க மேலாளர், வட்டார வழங்கல் அலுவலர், குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர், வட்டார மருத்துவ அலுவலர், மாவட்ட சமூக நல அலுவலக பணியாளர்கள், குழந்தை பாதுகாப்பு அலகின் சமூகப்பணியாளர்கள், இந்தோ அறக்கட்டளை பணியாளர்கள் இடம்பெற்றுள்ளனர்.

அதேபோல, கிராம அளவிலான குழுக்களில் கிராம நிர்வாக அலுவலர், ஊராட்சி மன்ற செயலர், பள்ளி தலைமை ஆசிரியர், கிராம சுகாதார செவிலியர், குழந்தைகள் மையபணியாளர், நியாய விலைக்கடை விற்பனையாளர், மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினர்கள், இல்லம் தேடிக்கல்வி பணியாளர், இந்தோ அறக்கட்டளை பணியாளர், மாவட்ட சமூக நல அலுவலக பணியாளர், குழந்தை பாதுகாப்பு அலகு பணியாளர் இடம் பெற்றுள்ளனர்.
இக்குழுக்களில் மாவட்ட மற்றும் வட்டார அளவிலான குழு உறுப்பினர்களிடம் மாவட்ட ஆட்சித்தலைவர் குழந்தை திருமணத்தை தடுப்பதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஏற்கனவே ஆலோசனை செய்திருந்த நிலையில், இன்று கிராம அளவிலான குழுவினரிடம் கலந்துரையாடினார்.
இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது

நம் பெரம்பலூர் மாவட்டத்தில் குழந்தை திருமணம் நடைபெறுவது மிகவும் வருத்தத்திற்குரியதாகும். உங்கள் பகுதியில் குழந்தை திருமணம் நடைபெறுவது குறித்த தகவல் உங்கள் மூலம் மாவட்ட நிர்வாகத்திற்கும், மாவட்ட சமூக நலத்துறைக்கும் தெரியப்படுத்தவும், குழந்தை திருமணத்தால் ஏற்படும் தீமைகள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவும், குழந்தை திருமணங்கள் அதிகம் நடைபெற்ற கிராமங்களில் கிராம அளவிலான குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளது. உங்களால் ஒரு குழந்தை திருமணம் தடுத்து நிறுத்துவது அந்த சந்ததியையே காப்பாற்றியதற்கு சமம்.
இந்தக்குழுவில் இடம்பெற்றிருக்கும் ஒவ்வொருவரும் உங்கள் பகுதியில் மக்களோடு மக்களாக, ஒவ்வொருவரையும் அறிந்து வைத்திருப்பவர்களே. உங்களுக்கு தெரியாமல் நீங்கள் இருக்கும் கிராமத்தில் எந்த நிகழ்வும் நடக்காது என்பதை அறிவோம். அதனால்தான் குழந்தைத் திருமணம் அதிகம் நடைபெற்ற கிராம ஊராட்சிகளில் முதற்கட்டமாக குழந்தை திருமண தடுப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.
பெண் குழந்தைகள் தொடர்ந்து பள்ளிக்கு வருகை புரிவதை கண்காணிப்பது, பள்ளிக் கல்வி முடித்து உயர்கல்வி பயில்வதை உறுதி செய்வது, குழந்தை திருமணத்தால் ஏற்படும் தீமைகளை எடுத்துரைப்பது உள்ளிட்ட பணிகளை கிராம அளவில் நீங்கள் மேற்கொள்ள வேண்டும். உங்கள் அனைவரையும் இணைத்து ஒரு வாட்ஸ்அப் குழு உருவாக்கப்பட்டுள்ளது. உங்கள் பகுதியில் குழந்தை திருமணம் நடைபெறுவதுபோன்ற தகவலறிந்தால் உடனடியாக இக்குழுவில் பதிவிடுங்கள்.

சமூக நல அலுவர்கள் தொடர் நடவடிக்கை எடுப்பார்கள்.
குழந்தைத் திருமணம் நடைபெறும் பட்சத்தில் குழந்தைத் திருமணத்தை நடத்தி வைப்போர், திருமணத்தில் கலந்துகொள்வோர், திருமணத்தை புகைப்படம் எடுப்பவர், திருமண பத்ரிக்கை அச்சிட்டவர், ஒலி,ஒளி அமைப்பவர், திருமண மண்டப உரிமையாளர், உள்ளிட்டோருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.1 லட்சம் அபராதமும் விதிக்கப்படும் என்ற தகவலை அனைவருக்கும் நீங்கள் எடுத்துக்கூறவேண்டும்.
எனவே, இக்குழுவில் இடம்பெற்றுள்ள ஒவ்வொருவரும் உங்களின் சமூகப்பொறுப்புணர்வை உணர்ந்து அர்ப்பணிப்போடு பணியாற்றி நமது பெரம்பலூர் மாவட்டத்தை குழந்தை திருமணம் நடைபெறாத மாவட்டமாக மாற்ற முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன்.
இவ்வாறு தெரிவித்தார்.

பின்னர், குழந்தை திருமண தடுப்பு குழு உறுப்பினர்கள் மற்றும் தன்னார்வலர்களிடம் ஒவ்வொரு கிராம ஊராட்சிகளில் உள்ள அனைத்து வீடுகளிலும் ஒட்டுவதற்கு குழந்தைத் திருமணம் தடுப்பு பற்றிய விழிப்புணர்வு சுவரொட்டிகள், துண்டு பிரசுரங்கள் ஆகியவற்றை மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார். கிராம அளவிலான குழந்தை திருமணம் தடுப்புக்குழுவின் மூலம் இதுவரை இரண்டு குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது,

இந்நிகழ்வில், மாவட்ட சமூக நல அலுவலர் புவனேஸ்வரி, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் ஜெயஸ்ரீ, மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர் ராஜிவ் காந்தி, திட்ட ஒருங்கிணைப்பாளர் சமூக வளர்ச்சி திட்டம் மரு. பிரபு, மாவட்ட தாய் சேய் நல அலுவலர் சந்தியா, குழந்தை நல குழு உறுப்பினர் ரேவதி, மைய நிர்வாகி ஒருங்கிணைந்த சேவை மையம் கீதா மற்றும் அரசு அலுவலர்கள், தன்னார்வலர்கள், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *