தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.
ஜோ.லியோ யாக்கோப் ராஜ்.
தஞ்சாவூர்,
தஞ்சாவூர் குழந்தை இயேசு திருத்தல ஆண்டு பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் அனைத்து மதத்தினரும் கலந்து கொண்டனர்.
தஞ்சை- புதுக்கோட்டை சாலையில் நிர்மலா நகரில் கார்மெல் குழந்தை இயேசு திருத்தலம் உள்ளது. தமிழக கார்மெல் அருட்தந்தையர்களால் இந்த திருத்தலம் நிறுவப்பட்டுள்ளது. திருமண தடை நீங்க, குழந்தை பேறு பெற, குழந்தைகள் ஞானத்திலும், அறிவிலும் சிறந்த விளங்க இந்த திருத்தலத்தில் உள்ள இயேசு ஆசீர்வதிப்பார் என்ற நம்பிக்கையுடன் ஜெபித்து வருகின்றனர்.
மேலும் வேண்டுதல்களின்படி புதிதாக பிறந்த குழந்தைகளை தாய்மார்கள் எடுத்து வந்து இயேசு ஆசீர் தொட்டிலில் இட்டு ஆசீர் பெற்று செல்கின்றனர்.
இத்தகைய சிறப்பு வாய்ந்த கார்மெல் குழந்தை இயேசு ஆலயத்தில் ஆண்டு பெருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
முன்னதாக கொடி மந்திரித்து மக்களுடைய வழிபாட்டுக்காக வைக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து கொடி பவனி நடைபெற்று மதுரை உயர் மறைமாவட்ட மேனாள் பேராயர் அந்தோணிபாப்புசாமி கொடியை புனிதம் செய்து ஏற்றிவைத்தார். முன்னதாக விழாவில் பங்கேற்ற மதுரை உயர்மறைமாவட்ட மேனாள் பேராயர் அந்தோணிபாப்புசாமி, தஞ்சை மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன், இஸ்லாமிய அமைப்பை சேர்ந்த லியாகத்அலி ஆகியோர் மதம் கடந்த மனிதநேயத்தின் அடையாளமாக சமாதான புறாக்களை பறக்க விட்டனர்.
அப்போது திருத்தலம் மின்விளக்குகளால் ஜொலித்தது. பலூன்கள் பறக்கவிடப்பட்டது. வாணவேடிக்கை நிகழ்த்தப்பட்டன. பின்னர் பொதுமக்களின் கோரிக்கைகள் நிறைவேற்றவும், நாட்டின் வளர்ச்சிக்காகவும் சிறப்பு கூட்டுத் திருப்பலி நடைபெற்றது. திருவிழாவில் கலந்து கொண்டவர்களுக்கு அன்பு உணவு விருந்து தரப்பட்டது.
தஞ்சை மறைமாவட்ட முதன்மை குரு பிரபாகர், கார்மெல் குழந்தை ஏசு திருத்தல அதிபர் சுரேஷ்குமார், மத்திய மாவட்ட தி.மு.க. பிரதிநிதி பெஞ்சமின், கவுன்சிலர் மரகதம், குருக்கள் 20 பேர், கன்னியர்கள் 100 பேர் உள்பட பலர் கலந்து கொண்டனர்,
விழாவுக்கான ஏற்பாடுகளை கார்மெல் 3-ம் சபையினர், 3 மணி செபகுழுவினர், பவுர்ணமி செபகுழுவினர், பாடகர் குழுவினர், குழந்தை இயேசு ஆலய தன்னார்வ தொண்டர்கள், மதர் தெரசா பவுண்டேசன் தலைவர் சவரிமுத்து தலைமையிலான தன்னார்வ தொண்டர்கள் செய்திருந்தனர்.
திருப்பலி முடிவில் அருண்மெலோடிஸ் இசை நிகழ்ச்சி நடைபெற்றது.
இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 5.30 மணிக்கு ஜெபமாலை நவநாள் திருப்பலி இத்தாலி இம்பேரியர் வட்டார அதிபர் ஆரோக்கியசாமி, இத்தாலி கார்மெல் சபை நாப்போலி மறைமாநில தந்தை ஆரோக்கியபத்மராசா தலைமையில் நடக்கிறது.
அதைத்தொடர்ந்து தினமும் விழா நாட்களில் மாலை 5.30 மணிக்கு ஜெபமாலை, நவநாள் திருப்பலி நடக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர்பவனி வருகிற 6-ந்தேதி (வியாழக்கிழமை) மாலை 5.30 மணிக்கு நடக்கிறது.