அரியலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிப்ரவரி(1) மாலையில் நூற்றாண்டு விழா கொண்டாடுகிறது.
இதுகுறித்து அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் ப.கவிதா கூறுகையில், தமிழக அரசு மற்றும் முன்னாள் மாணவர்கள் சார்பில் கொண்டாடப்படும் இப்பள்ளி நூற்றாண்டு விழாவுக்கு, மாவட்ட ஆட்சியர் பொ.ரத்தினசாமி தலைமை வகிக்கிறார்.
போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் நூற்றாண்டு விழா சுடரேற்றி தொடக்கி வைத்து விழாப் பேரூரையாற்றுகிறார். மக்களவை உறுப்பினர் தொல்.திருமாவளவன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபக்சிவாச், சட்டப் பேரவை உறுப்பினர்கள் அரியலூர் கு.சின்னப்பா, ஜெயங்கொண்டம் க.சொ.க.கண்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்குகின்றனர்.
விழாவில் முன்னாள் மாணவரும், அரியலூர் மாவட்ட வளர்ச்சிக் குழுத் தலைவருமான சீனி.பாலகிருஷ்ணன்(92) உள்ளிட்டோர் நன்கொடையாக வசூலித்து, பள்ளிக்கு தேவையான கல்வி தளவாடங்களை சீர்வரிசையாக கொண்டு வந்து சிறப்பிக்க உள்ளனர். மாவட்டமுதன்மைக் கல்வி அலுவலர், கல்வி மாவட்ட அலுவலர்கள், பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர், கல்வி மேலாண்மைக் குழுவினர் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர் என்றார்.