பரமத்தி வேலூர் தண்ணீர் பந்தல் மேடு பகுதி நீரோடை ஆக்கிரமிப்புகளை அகற்றி சாக்கடை வசதி செய்து தர வேண்டும் என பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அருகே உள்ள பொத்தனூர் பேரூராட்சி தண்ணீர் பந்தல் மேடு 1வது வார்டு லட்சுமி நகர், அம்மன் நகர், விநாயகர் பகுதி ஆகிய இடங்களில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
பல ஆண்டுகளாக சாக்கடை வசதி இல்லாததால், மழைக்காலங்களில் கழிவுநீர் தேங்கி நிற்கும் நிலை உருவாகி, சுகாதார சிக்கல்கள் அதிகரித்து வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர் இதுகுறித்து பேரூராட்சி அலுவலகம் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என அவர்கள் தெரிவிக்கின்றனர்.
கடந்த 30.06.2025 அன்று மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து மனு அளித்தபோது, அவரது அறிவுறுத்தலின் பேரில் பரமத்தி வேலூர் வட்டாட்சியர் அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டார் ஆய்வின் போது நீரோடை ஆக்கிரமிப்பு செய்தவர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.
ஆனால், சிலர் சாக்கடை அமைக்க இடமளிக்க மறுப்பு தெரிவித்து வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
ஏற்கனவே நீரோடையின் ஒரு பகுதி வரை திறந்தவெளி கால்வாய் அமைக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. மீதமுள்ள பகுதியில் சுமார் 5 முதல் 10 அடி அகலத்தில் சாக்கடை கால்வாய் அமைத்து, பழைய கால்வாயுடன் இணைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பல வருடங்களாக சாக்கடை வசதி இல்லாமல் அவதிப்படுகிறோம். உடனடியாக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். என பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்குமா என்பது எதிர்பார்ப்பாக உள்ளது.