கோவை
இளம்பெண் கொலை வழக்கில் சமூக ஆர்வலர் மீது ‘பொய் வழக்கு’ முயற்சி – காவல் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க கோரி டிஐஜி’யிடம் புகார்..
இளம்பெண் கொலை சம்பவம் தொடர்பாக சமூக ஆர்வலர் மீது பொய் வழக்கு பதிவு செய்ய முயற்சி மேற்கொள்ளப்படுவதாக குற்றம் சாட்டி, சம்பந்தப்பட்ட காவல் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோவை மேற்கு மண்டல காவல்துறை துணை தலைவரிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
ஈரோட்டை சேர்ந்தவர் வீரக்குமார்,இவர் ஆதி தமிழர் முன்னேற்ற கழகத்தின் துணை பொதுச் செயலாளராகவும்,கடந்த 25 ஆண்டுகளாக பட்டியலின மக்களுக்காக சமூக சேவையும் செய்து வருகிறார். இந்நிலையில் கடந்த வாரம் ஈரோட்டில் ஒரு இளம்பெண் கொலை செய்யப்பட்டு கிடந்த வழக்கில் விசாரணை மேற்கொள்ளும் பொருட்டு, வீரக்குமாரை ஒரு வாரமாக காவல் நிலையத்திற்கு அழைத்து விசாரித்து வருவதாக கூறப்படுகிறது.
தன்னை திட்டமிட்டு குற்ற வழக்கில் சிக்க வைக்க முயற்சி நடைபெறுவதாக வீரக்குமார் குற்றம் சாட்டியுள்ளார்.இதுகுறித்து அவர் கோவை மேற்கு மண்டல காவல்துறை துணை தலைவரிடம் எழுத்து மூலமாக புகார் மனு அளித்து, சம்பந்தப்பட்ட காவல் அதிகாரி மீது உரிய நடவடிக்கை எடுத்து நியாயமான விசாரணை நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய வீரக்குமார், “இளம்பெண் இறப்பதற்கு சில நாட்களுக்கு முன்பு அரசு மருத்துவமனை முன்பு என்னை சந்தித்து சிகிச்சைக்காக பணம் கேட்டார். நான் உதவி செய்து, எனது விசிட்டிங் கார்டை வழங்கி மேலும் ஏதேனும் உதவி தேவைப்பட்டால் தொடர்பு கொள்ளச் சொன்னேன். இறந்து கிடந்த அந்த பெண்ணிடம் எனது விசிட்டிங் கார்டு இருந்ததால், என்னை வேண்டுமென்றே இந்த கொலை வழக்கில் சிக்க வைக்க முயற்சி செய்கிறார்கள்” என்று தெரிவித்தார்.