கோவை,

கோவை மாவட்டம் இக்கரை போளுவாம்பட்டி ஊராட்சி மற்றும் ஈஷா அறக்கட்டளை இணைந்து செயல்படுத்தும் நவீன எரிவாயு மயானத்தில் தொண்டாமுத்தூர் வட்டார பகுதிகளில் உள்ள அனைத்து மக்களும் பயன்பெறும் வகையில் ‘இலவச தகன சேவை’ தொடங்கப்பட்டு உள்ளது.

ஈஷா யோக மையத்தைச் சுற்றியுள்ள 5-க்கும் மேற்பட்ட பஞ்சாயத்துகளை சேர்ந்த மக்கள், அவர்களின் பகுதிக்கு அருகிலேயே ஒரு மயானத்தை அமைத்து தருமாறு அரசு அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்திருந்தனர். இதன் தொடர்ச்சியாக, ஈஷா அறக்கட்டளை பஞ்சாயத்து அனுமதியுடன் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட இதர அரசு துறைகளின் ஒப்புதல் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி நவீன எரிவாயு மயானத்தை அமைத்தது.

தற்போது இந்த நவீன எரிவாயு மயானம் முழுமையான செயல்பாட்டிற்கு வந்துள்ளது. இதில் தொண்டாமுத்தூர் வட்டாரப் பகுதிகளில் உள்ள அனைத்து மக்களும் பயன்பெறும் வகையில் இலவச தகன சேவை தொடங்கப்பட்டு உள்ளது.

இந்த எரிவாயு மயானத்தை இக்கரை போளுவாம்பட்டி ஊராட்சியுடன் ஈஷா அறக்கட்டளை இணைந்து செயல்படுத்துகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சத்குருவின் வழிகாட்டுதலில் அனைத்து மக்களுக்கும் கண்ணியமான இறுதிச் சடங்குகள் மற்றும் எரியூட்டும் சேவைகளை வழங்க வேண்டும் என்ற உன்னத நோக்கத்துடன் ஈஷா அறக்கட்டளை 2010-ஆம் ஆண்டு முதல் தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் உள்ள மயானங்களை இயக்கி பராமரித்து வருகிறது. தற்போது சென்னை பெசன்ட் நகர், கோவை, நெய்வேலி, வேலூர் மற்றும் தஞ்சாவூர் உள்ளிட்ட பகுதிகளில் 30 மயானங்களை ஈஷா பராமரித்து வருகிறது.

இந்த மயானங்களில் அழகான பூங்காவைப் போன்று பசுமையான சூழலை உருவாக்குவதல், மயானத்தை சுற்றி அடர் மரங்களை நட்டு பராமரித்தல், முறையான நடைபாதை வசதிகளை உருவாக்குதல், சுகாதாரமான முறையில் குளியல் மற்றும் கழிவறைகளை பராமரித்தல் மற்றும் அரசின் உதவியோடு சுற்றுச்சூழல் சீர்கேடு ஏற்படாத வகையில் சிறப்பான உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்குதல் எனப் பல்வேறு பணிகளை ஈஷா மேற்கொண்டு வருகிறது. இதை ஈஷா வணிக நோக்கமின்றி சேவை மனப்பான்மையுடன் செய்து வருகிறது.

மேலும் கடந்தாண்டு டிசம்பர் மாதம் ஈஷா சார்பில் பராமரிக்கப்பட்டு வரும் எரிவாயு மயானங்களில், பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்கள் தங்கள் அன்புக்குரியவர்களின் இறுதிச் சடங்குகளை கண்ணியத்துடன் எந்தவித நிதிச்சுமையுமின்றி மேற்கொள்ள உதவும் வகையில் ‘வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ள குடும்பங்களுக்கு இலவச தகன சேவை’ வழங்கும் திட்டத்தை அறிவித்தது. இத்திட்டம் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு அவர்களின் முன்னிலையில் தொடங்கி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *