திருவாரூர் செய்தியாளர் வேலா செந்தில்.

திருவாரூர் மாவட்டத்தில் இன்று பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்றார் முன்னதாக கொரடாச்சேரியில் ஆவின் பாலகத்தை திறந்து வைத்தார் .
தொடர்ந்து மானிய விலையில் கறவை மாடுகள் வழங்கும் நிகழ்ச்சியில் அமைச்சர் மனோ .தங்கராஜ் பொதுமக்களுக்கு வழங்கினார்.


இதனைத் தொடர்ந்து திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பால் வளத்தை உயர்த்துவது தொடர்பாக துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் பால்வளத்துறை அமைச்சர் மனோ.தங்கராஜ் தலைமையில் நடைபெற்றது பின்னர் செய்தியாளர்களிடம் அளித்த பேட்டியில் அமைச்சர் மனோ தங்கராஜ் கூறியதாவது, …

திருவாரூர் மாவட்டமானது விவசாயிகளும், விவசாய தொழிலாளர்களும் அதிகம் வசிக்கும் மாவட்டமாகும். இந்த மாவட்டத்தில் பால்வளத்துறையின் சார்பில் தேவைகள் அதிகமாக உள்ளதால் அதனை செயல்படுத்துவதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளன. மாவட்டத்தில் 55 பால் கூட்டுறவு சங்கங்கள் இயங்கி வரும் நிலையில் இதனை அதிகப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

மாநிலம் முழுவதும் கடந்த ஒன்னறைஆண்டுகளில் பால்வளத்துறை சார்பில் கறவை மாடுகள் கடன் தொகையாக ரூ ஆயிரம் கோடிக்கு மேல் வழங்கப்பட்டுள்ளது. இதில் திருவாரூர் மாவட்டத்திற்கு மட்டும் ரூ 70 கோடி வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு வழங்கப்படும் கடன் தொகையினை நடப்பாண்டில் இரு மடங்காக உயர்த்தி வழங்குவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

பால் கூட்டுறவு சங்கங்களில் 8 ஆயிரத்து 500 உறுப்பினர்கள் இருந்து வரும் நிலையில் இதில் யார் யாருக்கெல்லாம் இதுவரையில் கடன் கிடைக்கவில்லையோ அவர்களுக்கெல்லாம் கறவை மாடு கடன் வழங்குவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

தனியார் பால் விலை உயர்வு உள்ளிட்ட எந்த விற்பனை விலையினையும் கட்டுப்படுத்துவதற்கு அரசிடம் அதிகாரம் இல்லை. இதற்காக தான் ஆவின் நிறுவனம் இயங்கி வருகிறது. நியாயமான விலைகளில் பால், பால் பவுடர், நெய் உள்ளிட்ட பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

இந்த அரசு பொறுப்பேற்ற பின்னர் முதல்வர் மு. க ஸ்டாலின் பால் விற்பனை விலையில் லிட்டருக்கு ரூ3 குறைத்துள்ளார்.அதே நேரத்தில் கொள்முதல் விலை உயர்த்தப்பட்டுள்ள போதிலும் விற்பனை விலை தற்போது வரையில் உயர்த்தப்படவில்லை. ஆவின் பால் மற்றும் பால் பொருட்கள் தொடர்பாக யாருக்கு வேண்டுமானாலும் ஏஜென்சி வழங்குவதற்கு தயாராக உள்ளோம்.

ஒரு சில பால் கூட்டுறவு ஒன்றியங்கள் நஷ்டத்தில் இயங்கி வருவதால் ஊக்கத்தொகை வழங்க முடியாத நிலை இருந்து வருகிறது. இருப்பினும் இதனை சரி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மன்னார்குடியில் பால்வளத்துறைக்கு சொந்தமான இரண்டரை ஏக்கர் நிலம் இருந்து வருவதால் அங்கு பால் உற்பத்தி மற்றும் பால் பொருட்கள் உற்பத்திக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் கறவை மாடுகளுக்கு உரிய கடனுக்கு வட்டி சதவீதம் என்பது 15 சதவீதமாக இருந்து வந்த நிலையில் அதனை முதல்வர் முயற்சி செய்து தற்போது 9 சதவீதமாக குறைத்துள்ளார்.

பொள்ளாச்சி வழக்கில் நடுநிலையுடன் நடந்து கொண்டதாக எதிர்க்கட்சித் தலைவர் பழனிச்சாமி கூறி வருகிறார்.சம்பவம் நடந்தபோது தாமதமாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதன் பின்னர் உரிய நடவடிக்கை இல்லாத காரணமாக தான் இந்த வழக்கினை சிபிஐ கையில் எடுத்தது. இதற்கு பெரிய வரலாறு உள்ளது. இப்போதும் வரலாறு நடந்துள்ளது. சிலர் வெற்றி விழா கொண்டாடி வருகின்றனர். எதற்கு இந்த வெற்றி விழா என்றே தெரியவில்லை. எல்லாமே தந்திர வேலை தான். ஆனால் திமுக அப்படியல்ல. குற்ற சம்பவங்கள் ஏதேனும் நடைபெற்றால் உடனடியாக அதற்கு துரித நடவடிக்கை எடுத்து வருகிறது.

இதனை யாரும் குறை கூற உரிமை இல்லை. குறிப்பாக அதிமுக மற்றும் பிஜேபிக்கு இது பற்றி பேசுவதற்கு உரிமை இல்லை. இவ்வாறு அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.

இந்த நிகழ்ச்சியில் தொழில்துறை அமைச்சர் டி ஆர் பி ராஜா ,மாவட்ட ஆட்சியர் மோகனசந்திரன், நாகை நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜ் ,திருவாரூர் திமுக மாவட்ட செயலாளரும் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி. கலைவாணன் உள்ளிட்ட ஏராளமான பங்கேற்றனர்.

பேட்டி மனோ தங்கராஜ் பால்வளத்துறை அமைச்சர் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *