C K RAJAN
Cuddalore District Reporter
9488471235..
கடலூர்,கற்றல் கொண்டாட்டம் திட்டத்தின் மூலம் பயின்ற மாணவர்களின் படைப்புகளை காட்சிப்படுத்தும் கண்காட்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில் குமார் தொடங்கி வைத்தார்.
கடலூர் நகர அரங்கில் கற்றல் கொண்டாட்டம் திட்டத்தின் மூலம் பயின்ற மாணவர்களின் படைப்புகளை காட்சிப்படுத்தும் வகையில் 27.02.2026 மற்றும் 28.02.2026 ஆகிய இரண்டு நாள் கண்காட்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர்
சிபி ஆதித்யா செந்தில் குமார் நேற்று தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர்
சிபி ஆதித்யா செந்தில் குமார் தெரிவித்ததாவது,
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். பள்ளி மாணவர்களுக்கு சீருடைகள், புத்தகங்கள், புத்தகபை உள்ளிட்ட உபகரணங்கள் வழங்கும் திட்டம், விலையில்லா மிதிவண்டி வழங்கும் திட்டம், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் போன்ற பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
தனியார் பள்ளி மாணவர்களுக்கு இணையாக அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ,மாணவிகள் தங்களது திறன்களை வளர்த்துக் கொள்ளும் வகையிலும், வகுப்பறை கற்றலுக்கு அப்பால் சென்று மாணவர்கள் தங்கள் ஆர்வங்கள், திறமைகள் மற்றும் தலைமைத்துவ திறன்களை மேன்மைப்படுத்துவதற்கான வாய்ப்புகளை வழங்கும் வகையிலும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கோடை விடுமுறையில் அரசு பள்ளி மாணாக்கர்களுக்காக “கோடையில் கற்றல் கொண்டாட்டம்“ என்ற சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டது. இப்பயிற்சி வகுப்புகள் மூலம் மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர்களிடமிருந்து பெருவாரியான வரவேற்பு மற்றும் மாணவர்களின் திறன்களில் முன்னேற்றம் ஏற்பட்டது.
அதனை தொடர்ந்து மாவட்டத்தில் உள்ள 14 ஒன்றியங்களில் 69 மையங்களில் அனைத்து வகை அரசு பள்ளிகளில் 4 முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள 3,267 மாணவர்களுக்கு பள்ளி வேலை நாட்கள் மற்றும் வார இறுதி நாட்கள் முறையே ஒவ்வொரு நிகழ்விற்கும்60 மணி நேர அளவில் பயிற்சி வழங்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் மற்றும் பள்ளி கல்வி துறை மூலம் கற்றல் கொண்டாட்டம் திட்டம் 15.08.2025 அன்று தொடங்கிவைக்கப்பட்டது. இவ்வகுப்பில் அரசு பள்ளி மாணவர்கள் உயர்கல்வி பயிலும்போது எவ்வித தயக்கமும், அச்சமுமின்றி ஆங்கிலத்தில் பேசி,பயில வேண்டும் என்பதற்காக ஆங்கிலமொழி பேச்சு பயிற்சி, பரதம் மற்றும் கிராமிய நடனப் பயிற்சி, கலை மற்றும் ஓவியம் பயிற்சி, சதுரங்க விளையாட்டு பயிற்சி,நீச்சல் பயிற்சி, மண்பாண்டங்கள் தயாரித்தல், கோல்ப் விளையாட்டு, பாடல் மற்றும் இசைக் கருவிகள் போன்ற சிறப்பு பயிற்சிகள் வழங்கப்பட்டது.
மாணவர்களின் தனித்திறன்களை வெளிப்படுத்தும் வகையில் மாணவர்களால் வரையப்பட்ட பாரம்பரிய ஓவியங்கள், அருப ஓவியங்கள், கட்டமைக்கப்பட்ட வடிவ ஓவியங்கள், இயற்கை காட்சி ஓவியங்கள், பல்வகை இந்திய ஓவியங்கள், மாணவர்களால் தயாரிக்கப்பட்ட மண்பாண்டப் பொருட்கள், நிழற்படங்கள், வாசிப்போம் உயர்வோம் மாணவர்களின் படைப்புகள் ஆகிய அரங்குகள் கண்காட்சியில் இடம்பெற்றுள்ளது.
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஆங்கிலம் படிப்பதில் உள்ள சிரமத்தினை போக்கிடும் வகையில் ஆங்கிலமொழி திறன் பயிற்சி வழங்கப்பட்டதில் நல்ல முறையில் மொழித்திறனை பெற்று வருகின்றனர். சதுரங்கப் போட்டியில் பயிற்சி பெற்ற நமது மாணவர்கள் சர்வதேச அளவில் 5 பரிசுகளையும், மாநில அளவில் 72 பரிசுகளையும், மாவட்ட அளவில் 728 பரிசுகளையும், வட்ட அளவில் 298 பரிசுகளையும் என ஆக மொத்தம் 1,103 பரிசுகளையும் வென்றுள்ளனர். மேலும், பாடல் மற்றும் இசைக் கருவிகள், ஓவியம் வரைதல், புகைப்படம் எடுத்தல், மண்பாண்டம் தயாரித்தல், கலை படைப்புகள் ஆகியவற்றிலும் மாணவர்களின் படைப்புகள் சிறப்பாக உள்ளது.
மாநில அளவில் நடைபெற்ற கலைத் திருவிழா போட்டியில் கற்றல் கொண்டாட்ட நிகழ்வில் பயிற்சி பெற்ற நமது மாவட்டத்தைச் சார்ந்த 6 மாணவர்கள் பல்வேறு வகையான போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளனர்.
வாசிப்போம் உயர்வோம் நிகழ்வில் 150 மையங்களில் மாலை வேளையில் 4 மற்றும் 5 ஆம் வகுப்பில் பயிலும் 3,000 மாணவர்கள் நூலகத்திற்கு வரவழைக்கப்பட்டு,இல்லம் தேடிக்கல்வி தன்னார்வலர்கள் உதவியுடன் அவர்களின் வாசிப்புத்திறன் மேம்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் கல்வித்துறை சார்ந்த அலுவலர்கள் மாநில அளவில் நமது மாவட்டத்தினை கல்வியிலும் முதலிடத்தில் கொண்டுவரும் வகையில் பணியாற்றிட வேண்டும். மாணவர்களின் வளர்ச்சி மாவட்டத்தின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் வருவாய் கோட்டாட்சியர் சுந்தரராஜன், மாவட்ட கல்வி அலுவலர் துரைபாண்டியன்,உதவி திட்ட அலுவலர் சிங்காரவேலன், பள்ளிக்கல்வித்துறை அலுவலர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.