புதுச்சேரி:

உப்பளம் தொகுதிக்குட்பட்ட வாணரப்பேட்டை, ராசு உடையார் தோட்டத்தில் உள்ள திடீர் நகர் (கீழ்தோப்பு) பகுதியில் கடந்த பல ஆண்டுகளாக வசித்து வந்த 15க்கும் மேற்பட்ட ஏழை, எளிய குடும்பங்களை ரயில்வே துறை அப்புறப்படுத்தியதை அடுத்து, அவர்கள் மறுகுடியமைக்க உப்பளம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அனிபால் கென்னடி அவர்கள் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வந்தார்.

2021ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் மாண்புமிகு முதல்வருக்கு நேரில் மனு அளித்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிரந்தர குடியிருப்பு வழங்க கோரிக்கை விடுத்திருந்தார். அதன் பிரதிபலனாக நில சர்வே மற்றும் பதிவுத்துறை அதிகாரிகளிடமிருந்து பதில் கிடைத்ததை தொடர்ந்து, மாண்புமிகு முதல்வர் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக்கூட்டத்தில் லம்பார்ட் சரவணன் நகர் பகுதியில் 15 குடும்பங்களுக்கு குடியிருப்பு வழங்கும் சாத்தியக்கூறுகள் ஆய்வு செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, குடிசை மாற்று வாரியம் மூலம் கட்டி வரப்பட்ட 125 புதிய குடியிருப்புகளில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முன்னுரிமை அளித்து 15 வீடுகள் ஒதுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர்.

மேலும், குடிசை மாற்று வாரிய செயற்பொறியாளர் ரவிச்சந்திரன், உதவி பொறியாளர் அன்னில் குமார், இளநிலை பொறியாளர் சத்தியவானி ஆகியோரை நேரில் சந்தித்து, மக்களுடன் இணைந்து சட்டமன்ற உறுப்பினர் அனிபால் கென்னடி அவர்கள் ஆலோசனை நடத்தினார். கட்டுமான பணிகள் இறுதிக்கட்டத்தில் உள்ள நிலையில், ஒரு மாதத்திற்குள் வீடுகள் வழங்கப்படும் என அதிகாரிகள் பொதுமக்கள் முன்னிலையில் உறுதி அளித்தனர்.

அதனைத் தொடர்ந்து புதுச்சேரி குடிசை மாற்று வாரியம் மூலம் அடுக்குமாடி தொகுப்பு வீடு ஒதுக்கீடு உத்தரவை உப்பளம் தொகுதி மக்களுக்கு சட்டமன்ற உறுப்பினர் அனிபால் கென்னடி அவர்கள் வழங்கினார். இதனால் பெரும் மகிழ்ச்சி அடைந்த பொதுமக்கள், தங்களது நீண்டநாள் கோரிக்கையை நிறைவேற்றிய சட்டமன்ற உறுப்பினருக்கு நன்றி தெரிவித்து பாராட்டினர்.

இந்த நிகழ்வில் தொகுதி செயலாளர் சக்திவேல், கிளை செயலாளர்கள் காலப்பன் மற்றும் ராகேஷ் ஆகியோர் உடனிருந்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *