தாராபுரத்தில் சாக்கடை நீரை சாலையில் கொட்டும் அவலம் மனித கழிவுகளை கைகளால் அகற்றும் தூய்மை பணியாளர்கள்.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம்
நகராட்சியில், சாக்கடை கால்வாய்களில் எந்தவித பாதுகாப்பு உபகரணங்களும் இல்லாமல் தூய்மை பணியாளர்கள் நேரடியாக இறங்கி கழிவுகளை அகற்றும் வேதனைக் காட்சி, அனைவரையும் பதற செய்கிறது.
நேற்று திங்கட்கிழமை தாராபுரம் சர்ச் சாலையில், மழைநீர் மற்றும் கழிவுநீர் தேங்கும் நிலை ஏற்பட்டது. ராஜவாய்க்கால் சென்று சேர வேண்டிய கழிவுகள், கால்வாய் அடைப்பு காரணமாக வெளிவர முடியாமல் போனதால், நகராட்சி தூய்மை பணியாளர்கள் அந்த அடைப்புகளை அகற்றும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
பொதுவாக இவ்வாறான பணிகளுக்கு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட வேண்டும் என்பது விதிமுறையாக இருந்தாலும், தாராபுரம் நகராட்சி அலட்சியத்தால், பணியாளர்கள் சாக்கடையில் இறங்கி மண்ணையும், கழிவுகளையும் கைகளால் அகற்றும் அவலம் தொடர்கிறது.
சட்டத்தின்படி, மனிதர்களை சாக்கடையில் இறக்கி வேலை செய்ய வைப்பது கடுமையான குற்றம். இது மனித உரிமை மீறலும் கூட. ஆனால் இங்கு தினமும் தனியார் கழிவுநீர் லாரிகள் குறைந்தது நான்கு முறை, இத்தகைய கால்வாய்களில் கழிவுகளை கொட்டிவிடுகின்றன என்ற புகாரும் எழுந்துள்ளது.
இதனால் தூய்மை பணியாளர்கள் நோய்த் தொற்றுக்கு உள்ளாகும் நிலை உருவாகியுள்ளது.
சர்ச் சாலை மக்கள் அதிகம் பயன்படுத்தும் முக்கிய சாலை. அங்கு திரையரங்குகள், உணவகங்கள், அரசு மேல்நிலைப் பள்ளிகள் உள்ளிட்டவை உள்ளன. அந்தச் சாலையில் பணியாளர்கள் வாளியில் கழிவுநீரை எடுத்து, சாலையில் கொட்டுவது பெரும் சுகாதார சிக்கலாகவும், அப்பகுதியில் செல்பவர்களுக்கு கசப்பான அனுபவமாகவும் உள்ளது.
இது தொடர்பாக நகராட்சி ஆணையாளர் மற்றும் நகர மன்ற தலைவர் பாப்பு கண்ணன் ஆகியோருக்கு இந்த நிலைமை பற்றி தெரியவில்லையா என்பது சமூக ஆர்வலர்களின் கேள்வியாக உள்ளது.