திருவாரூர் செய்தியாளர் வேலை செந்தில்
திருவாரூர், அக்.16- தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில், பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும். இடைநிலை ஆசிரியர் ஊதிய முரண்பாட்டை சரி செய்திட வேண்டும். தகுதித் தேர்வில் இருந்து ஆசிரியர்களை முற்றிலுமாக பாதுகாத்திட வேண்டும்.
அரசாணை 243ஐ கைவிட வேண்டும். உயர் கல்வி படிப்புகளுக்கு மீண்டும் ஊக்க ஊதியம் வழங்க வேண்டும். அரசாணைகளின் படி பெறப்பட்ட ஊதியத்திற்கு தணிக்கை தடை வழங்குவதை கைவிட வேண்டும். இவைகள் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றிட வேண்டும். இதனை நடைபெறும் தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரில் அறிவிப்புகளாக வெளியிட வேண்டும் என வலியுறுத்தி அக்டோபர் 15, 16 மற்றும் 17 ஆகிய மூன்று நாட்கள் கோரிக்கை அட்டை அணிந்து பணியாற்றுவது என முடிவு செய்யப்பட்டது.
அதன்படி தமிழகம் முழுவதும் கூட்டணியினர் கோரிக்கை அட்டை அணிந்து பணியாற்றினர். திருவாரூர் அருகே பவித்திரமாணிக்கம் நடுநிலைப்பள்ளியில் கோரிக்கை அட்டை அணிந்து பணி புரியும் போராட்டத்தை பொதுச்செயலாளர் ரெ.ஈவேரா தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜெயந்தி உள்ளிட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். இதுபோல் மாவட்டத்தில் 10 ஒன்றியங்களிலும் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியை சேர்ந்த 1750 ஆசிரியர்கள் கோரிக்கை அட்டை அணிந்து பணியாற்றினர்.