புதுச்சேரி கட்டிட தொழிலாளர்களுக்கு அரசு சார்பில் கட்டிட தொழிலாளர்கள் நலவாரியம் மூலம் ஆண்டுதோறும் தீபாவளி போனஸ் வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில் கடந்த ஆண்டு கட்டிட தொழிலாளர்களுக்கு ரூபாய் 5 ஆயிரம் தீபாவளி போனஸாக வழங்கப்பட்டது.
இந்நிலையில் இந்த ஆண்டு அரசு அதனை ரூபாய் 6 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும் என கட்டிடத் தொழிலாளர்கள் சங்கத்தை சேர்ந்தவர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்து பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் கட்டிடத் தொழிலாளர்களுக்கு உயர்த்தி வழங்கப்படும் தீபாவளி போனஸ் தொகை அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கும் வழங்க வேண்டும் என்று திமுக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினர் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
இந்த நிலையில், தீபாவளி போனஸ் இனி 60 வயதிற்கு மேற்பட்ட கட்டிடத் தொழிலாளர்களுக்கு இல்லை என தகவல் பரவியது. இதனால் அதிர்ச்சி அடைந்த 300க்கும் மேற்பட்ட கட்டிட தொழிலாளர்கள் தட்டாஞ்சாவடி பகுதியில் உள்ள கட்டிட தொழிலாளர் நலவாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு போனஸ் இல்லை என்றால் எங்கள் வாக்கு மட்டும் உங்களுக்கு எதற்கு? என கேள்வி எழுப்பிய தொழிலாளர்கள், வட மாநிலங்களை சேர்ந்த ஏராளமானவர்களை கட்டிட தொழிலாளர்கள் நலவாரியத்தில் சேர்த்துள்ளதாக குற்றம்சாட்டினர்.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா அவர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட கட்டிடத் தொழிலாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். தொடர்ந்து கட்டிட நல வாரிய அதிகாரி கண்ணபிரானுடன் பேசினார்.
அதில் உடன்பாடு ஏற்படாத நிலையில் பாதிக்கப்பட்ட கட்டிடத் தொழிலாளர்களுடன் முதல்வர் ரங்கசாமியை அவரது இல்லத்தில் சந்தித்து நலவாரியத்தில் உறுப்பினராக உள்ள அனைவருக்கும் தீபாவளி போனஸ் வழங்க வேண்டும் என்றும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களை புறக்கணிப்பது சரியில்லை என்றும் தெரிவித்தார்.
அதற்கு பதிலளித்த முதல்வர் தணிக்கை குழு அளித்த அறிக்கையின் அடிப்படையில் ஆளுநர் இதுபோன்ற நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்தார். கட்டிட தொழிலாளர் நல வாரியத்தில் மக்கள் பணம் கோடிக்கணக்கில் இருப்பதை சுட்டிக்காட்டி ஆளுநரிடம் தாங்கள் பேசி அனைத்து கட்டிட தொழிலாளர்களுக்கும் தீபாவளி போனஸ் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.