புதுச்சேரி யூனியன் பிரதேசம், காரைக்கால் மாவட்டம், வடக்கு வரிச்சிக்குடி கிராமத்தில் இயற்கை விவசாயி திரு. பாஸ்கர் அவர்களின் வயலில் பாரம்பரிய பழஞ்சேர் மற்றும் பிரத்தியேக நீர் மேலாண்மை தொழில்நுட்பங்கள் குறித்து, பண்டித ஜவஹர்லால் நேரு வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் இணைப் பேராசிரியர் முனைவர் ஆனந்த்குமார் அவர்களின் ஒருங்கிணைப்பில், 28 மாணவர்–மாணவியர் மற்றும் முன்னோடி விவசாயிகளின் பங்கேற்புடன் நிகழ் ஆய்வு நடைபெற்றது.
முனைவர் ஆனந்த்குமார் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கி பேசுகையில், இயற்கை விவசாயத்தில் இரசாயனக் களைக்கொல்லிகள் பயன்படுத்தப்படாத காரணத்தால் களைகள் மேலாண்மை செய்வதில் விவசாயிகள் பெரும் சிரமத்தை எதிர்கொள்கின்றனர் என்றார். செயற்கை இரசாயனப் பொருட்களின் பயன்பாடு தடைசெய்யப்பட்டிருப்பதால், களைகள் கட்டுப்பாடு பலருக்கு சவாலாக மாறியுள்ளது. இந்த சிரமம் காரணமாக சில விவசாயிகள் இயற்கை விவசாயத்தைத் தொடராமல் விலகும் அவல நிலையும் உருவாகியுள்ளது என்றும் குறிப்பிட்டார்.
ஆனால் “பழஞ்சேர்” எனப்படும் பாரம்பரிய நிலத் தயாரிப்பு முறை மற்றும் அதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் பிரத்தியேக நீர் மேலாண்மை தொழில்நுட்பம், இயற்கை விவசாயத்தில் ஏற்படும் இந்த சவால்களுக்கு பயனுள்ள தீர்வை வழங்குவதாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது. இதனை முன்னிட்டு இந்நிகழ் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றார்.
இயற்கை விவசாயி திரு. பாஸ்கர் அனைவரையும் வரவேற்று பேசுகையில், நெல் விளையும் நிலத்தை பழம்சேர் ஆக்கி நீர் மேலாண்மையுடன் சாகுபடி செய்வது மரபு தொழில்நுட்பமாகும் என்று செய்முறையை விளக்கினார்.
சம்பா பருவம் ஆடி மாதம் ஒன்றாம் தேதி தொடங்குகிறது. அதற்கு முன்னதாக ஆனி 15ஆம் தேதி முதல் பசும்தாள் பயிர்களை விதைத்து, சாணி எரு இட்டு, நெல் சாகுபடிக்கு முன் நிலத்தைத் தயாரிக்கும் பணியைத் தொடங்க வேண்டும்.
பசும்தாள் பயிர்கள் பாதி பூத்திருக்கும் நிலையில், அதாவது விதைத்த 45 நாட்களுக்குப் பிறகு, ஆடி மாத இறுதி வாரத்தில் அவற்றை மடக்கி உழுது நல்ல சேர் செய்ய வேண்டும்.
அந்த சேர் மறைய நீரைக் கட்டி குறைந்தது ஒரு மாத காலம் வைக்க வேண்டும். நீரை முழுமையாக நிரப்பி வைப்பது அல்ல; சேர் மறையும் வரை நிலம் தொடர்ந்து ஈரநிலையில் இருக்க வேண்டும்.
இதன் மூலம் மண்ணில் நுண்ணுயிர்கள் பெருகி, பசும்தாள் உரமும் சாணி எருவும் நன்றாக மக்கி, நாவல் பழ நிறமாகத் தோன்றி, மண் இலகுவாக மாறும். நிலம் பழம்சேர் ஆகும்.
பழம்சேர் ஆக ஒரு மாத காலம் ஆகும் நிலையில், நிலத்தில் எஞ்சியிருந்த புல் மற்றும் பூண்டு விதைகள் முளைக்கத் தொடங்கும். ஆகவே, நாற்று நடவுக்கு முன்புநாள் மீண்டும் ஒருமுறை நன்றாக உழவு செய்ய வேண்டும்.
பசும்தாள் பயிர்களை மடக்கி உழுவதன் மூலமும், பின்னர் நீரைத் தொடர்ந்து கட்டி வைப்பதாலும், மேலும் நடவுக்கு முன்பு உழுவதாலும் நிலத்தில் உள்ள களைகள் மடிந்து, அவையும் உரமாக மாறும்.
இவ்வாறு பழம்சேர் செய்து பின்னர் நடவு செய்தால், ஆரம்பகட்ட களைகள் முழுமையாக கட்டுப்படுத்தப்படும். நடவு செய்த நாற்றுகள் செழிப்பாக வளரும்.
மேலும், சீராக நடவு செய்த பிறகு மூன்று வாரங்கள், அதாவது 21 நாட்கள் வரை சேர் தெரியாமல் பிரத்தியேக நீர் நிர்வாகம் செய்ய வேண்டும். இதன் மூலம் புதிய களைகள் முளைக்காமல் முழுமையாக கட்டுப்படுத்த முடியும்.
மண்ணும் நல்ல நெகிழ்வுத் தன்மையுடன் மாறி, இளம் பயிர்கள் நன்றாக வேர் ஊன்றி செழிப்பாக வளரும்.
நடவு செய்த மூன்று வாரங்களுக்கு பிறகு, காய்ச்சலும் பாய்ச்சலும் ஆக இருக்கும் வகையில் தண்ணீர் வைக்க வேண்டும்.
பழம்சேர் செய்து நெல் நடவு செய்வதன் மூலம் பெருமளவு களைகள் கட்டுப்படுத்தப்பட்டு, நிலத்தின் வளம் அதிகரிக்கிறது. பயிர்கள் செழிப்பாக வளர்ந்து, களைக்கொல்லி மற்றும் உரம் போன்ற இடுபொருள் செலவுகள் குறைகின்றன. களைகள் எடுக்கும் கூலியும் குறைந்து, இயற்கை விவசாயத்தில் வெற்றி காண முடியும் என்று திரு. பாஸ்கர் விளக்கினார்.
பழஞ்சேர் முறையில் அனுபவம் கொண்ட முன்னோடி விவசாயிகளான பிள்ளைத்தெருவாசல் திரு. முருகவேல், விழிதியூர் திரு. அரவிந்தன், டி.ஆர். பட்டினம் திரு. பழனிவேல், மேலையூர் திரு. சௌரிராஜன், கோட்டுச்சேரி கிராமத்தைச் சேர்ந்த திரு. நச்சுபிள்ளை, திரு. ராஜவடிவேலன், திரு. ஆகாஷ், திரு. ஹரிஷ் மற்றும் வரிச்சிக்குடி கிராமத்தைச் சேர்ந்த திரு. கேசவன், திரு. ராஜ்குமார் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்–மாணவியருக்கு செய்முறை தொடர்பான ஆலோசனைகளை வழங்கினர்.
கள அனுபவத்தில் கற்றதன் அடிப்படையில் மாணவிகள் சரோஷ்ணி மற்றும் யோகப்பிரியா பின்னூட்டக் கருத்துகளைத் தெரிவித்தனர். மாணவிகள் சிவசக்தி மற்றும் லாவண்யா ஒன்றுகூடலின் போது கூட்டு முயற்சியுடன் சரிபார்க்கப்பட்ட தொழில்நுட்பத்தை ஆவணப்படுத்தினர். இறுதியில் மாணவர் தமிழ்மாறன் நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.