வரட்டுப்பள்ளம் அணையில் மீன் பிடிக்க அனுமதித்தால், மீன்களை விற்பனை செய்ய எங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என, வனத்துறையினர் ‘டிமாண்ட்’ விடுப்பதாக மீனவர்கள் குமுறுகின்றனர்.

அந்தியூர் அருகேயுள்ள வரட்டுப்பள்ளம் அணையில் மீன் பிடிக்கும் உரிமத்தை, அந்தியூர் பெஸ்தவர் மீனவர் கூட்டுறவு சங்கம் பெற்றிருந்தது. இங்கு, ஜிலேபி, கட்லா, பொட்லா, ரோகு, மிருகால் ஆகிய மீன் வகைகளை பிடித்து, கூட்டுறவு சங்கத்தினர் விற்பனை செய்து வந்தனர்.

இதற்கான ஐந்தாண்டு குத்தகை காலம், கடந்த 22ம் தேதியோடு முடிவடைந்தது. மேலும், தந்தை பெரியார் வன சரணாலயமாக, அந்தியூர் வனசரகம் அறிவிக்கப்பட்டதால், அதனுள் அடங்கும் வரட்டுப்பள்ளம் அணையில் மீன் பிடிக்க, மீன்வளத்துறைக்கும், மீனவர்களுக்கும், மாவட்ட வனத்துறை தடை விதித்தது.

இந்நிலையில், வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது எனவும், மீண்டும் மீன்பிடிக்க அனுமதிக்க வேண்டும் எனவும், கடந்த திங்களன்று, மீனவர் சங்கத்தினர், மாவட்ட கலெக்டர் கந்தசாமியை நேரில் சந்தித்து மனு வழங்கினர். இது சம்பந்தமாக நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் கூறினார்.

இப்பிரச்சினை குறித்து, நேற்று முன்தினம், அந்தியூர் வனசரக அலுவலகத்தில், ரேஞ்சர் முருகேசன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
கூட்டத்தில், மீன் பிடிக்க அனுமதி வழங்கினால், மீன்களை வனத்துறையினருக்கே வழங்க வேண்டும் என்றும்; இல்லையென்றால் மீன் பிடிக்க அனுமதியில்லை என, வனத்துறை தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து, மீனவர் சங்கத்தினர் கூறியதாவது;
கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக, வரட்டுப்பள்ளம் அணையில் மீன் பிடித்து மீனவர் சங்கத்தினர் பிழைப்பு நடத்தி வருகிறோம். சரணாலயமாக அறிவித்ததால், மீன் பிடிக்க அனுமதியில்லை என வனத்துறை அறிவித்துள்ளது.

இதனால், எங்கள் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது. இரு நாட்களுக்கு முன், வனசரக அலுவகத்தில் நடந்த கூட்டத்தில், மீன் பிடிக்க அனுமதித்தால், அம்மீன்களை எங்களுக்கே கொடுக்க வேண்டும் எனவும்; நாங்களே விற்று, எங்கள் அக்கவுண்டில் பணத்தை செலுத்தி கொள்வோம் என்றும் வனத்துறையினர் தெரிவித்தனர்.

மேலும், மாதம் ஒரு நாள் மீன் பிடிக்கும் அனுமதியளித்து, அதற்கான கூலியை மட்டும் எங்களுக்கு வழங்குவதாகவும் வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர் வனத்துறையினர் எங்களுக்கு எதிராக செயல்படுகின்றனர்.

புலிகள் காப்பகத்துக்குள் உள்ள பவானிசாகர், ஆனைமுடி, சோலையாறு, பில்லுார் அணை மீன்பிடிக்க அனுமதி வழங்கியதை போல, இங்கும் அனுமதி வழங்க வேண்டும்.
வரட்டுப்பள்ளம் அணையில் மீன் பிடிக்க அனுமதி கோரி, அடுத்த மாதம் ஆகஸ்ட் 4ம் தேதி, அந்தியூர் வனத்துறை அலுவலகத்தில் குடியேறும் போராட்டம் நடத்தவுள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *