கரூர் செய்தியாளர்மரியான் பாபு
கரூர் சட்டமன்ற உறுப்பினர் வி. செந்தில்பாலாஜி“உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாமில் 18 பயனாளிகளுக்கு ரூ. 6.20 இலட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

கரூர் சட்டமன்ற உறுப்பினர் வி.செந்தில்பாலாஜி கரூர் மாநகராட்சி, வார்டு எண்.46 பகுதிகளுக்கு ராயனுார் ஆர்.ஆர். திருமண மண்டபத்தில் நடைபெற்ற “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாமில் மாவட்ட ஆட்சியர் மீ. தங்கவேல் தலைமையில் 18 பயனாளிகளுக்கு ரூ. 6.20 இலட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
பின்னர் கரூர் சட்டமன்ற உறுப்பினர் தெரிவித்ததாவது,
தமிழ்நாடு முதலமைச்சரால் தொடங்கி வைக்கப்பட்டு மக்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்று தமிழ்நாடு முழுவதும் நடைபெற்று வரும் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாமானது கரூர் மாவட்டத்தில் 3 மாதங்களில் 179 இடங்களில் நடைபெறவுள்ளது. கடந்த 15.07.2025 அன்று தொடங்கி 41 முகாம்கள் நடத்தப்பட்டுள்ளது. இம்முகாம்கள் மூலம் கடந்த 01.08.2025 வரை 32,887 மனுக்கள் வரப்பெற்றுள்ளது.
இதில் 12,382 மனுக்கள் “கலைஞர் மகளிர் உரிமைத் தொகை” பெறுவதற்கான கோரிக்கை மனுக்கள் ஆகும்.“உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாமில் வருவாய்த் துறை, மாநகராட்சி மற்றும் தமிழ்நாடு மின்சார வாரியம் ஆகிய துறைகளில் வழங்கப்படும் சேவைகளில் பெயர் மாற்றம் உள்ளிட்ட மனுக்களுக்கு தொடர்புடைய துறைகள் மூலம் அன்றைய தினமே தீர்வு காணப்படுகின்றன.
ஒரு சில மனுக்களுக்கு ஒரு வாரம் காலம் எடுத்துக்கொள்ளப்பட்டு விசாரித்து தகுதியுடைய மனுக்களுக்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இம்முகாம்கள் மூலம் பொதுமக்கள் அளிக்கும் மனுக்களுக்கு அதிகபட்சம் 45 நாட்களுக்குள் தீர்வு காணப்பட வேண்டுமென தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவுகளை வழங்கியுள்ளார்கள். தமிழ்நாடு முதலமைச்சரின் திராவிட மாடல் அரசின் மீதுள்ள நம்பிக்கையில் தான் பொதுமக்கள் தங்களின் கோரிக்கை மனுக்களுக்கு உரிய தீர்வு கிடைக்கும் என ஆர்வத்துடன் மனுக்களை அளித்து வருகிறார்கள்.
எனவே தொடர்புடைய அலுவலர்கள் அம்மனுக்களை பரிசீலித்து தகுதியுடைய மனுக்களுக்கு உரிய கால அளவில் தீர்வு காண வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளதென கரூர் சட்டமன்ற உறுப்பினர் செந்தில்பாலாஜி தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து கூட்டுறவுத் துறையின் சார்பாக 5 விவசாயிகளுக்கு ரூ. 6.20 இலட்சம் மதிப்பீட்டில் கால்நடை பராமரிப்பு கடனுதவிகளும், எரிசக்தித் துறையின் சார்பாக 2 நபர்களுக்கு மின் இணைப்பு பெயர் மாற்றத்திற்கான ஆணைகளையும், வருவாய்த் துறையின் சார்பாக 6 நபர்களுக்கு இருப்பிடச் சான்று, சாதிச்சான்று, மற்றும் வருமானச் சான்று உள்ளிட்ட சான்றிதழ்களையும்,மாநகராட்சியின் சார்பாக 5 நபர்களுக்கு சொத்துவரி பெயர் மாற்றத்திற்கான ஆணைகளையும் என மொத்தம் 18 நபர்களுக்கு ரூ. 6.20 இலட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை கரூர் சட்டமன்ற உறுப்பினர் வி. செந்தில்பாலாஜி வழங்கினார்.
இம்முகாமில் மாநகராட்சி மேயர் வெ. கவிதா, மாவட்ட வருவாய் அலுவலர் ம. கண்ணன், மாநகராட்சி ஆணையர் கே.எம். சுதா, துணை மேயர் சரவணன், மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் தொடர்புடைய அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.