தஞ்சாவூர் இரயில்வே நிலைய முகப்பில் மீண்டும் பெரிய கோவில் வடிவம் அமைக்க வலியுறுத்தி ஆகஸ்ட் 22 முற்றுகை போராட்டம்!
தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.
ஜோ.லியோ யாக்கோப் ராஜ்.
தஞ்சாவூர் ஆக- 6. தஞ்சாவூர் இன்சூரன்ஸ் ஊழியர் சங்க கட்டிடம் சரோஜ் நினைவகத்தில் உலகத்தமிழர் பேரமைப்பின் துணைத் தலைவர் அய்யனாபுரம் சி.முருகேசன் தலைமையில் பல்வேறு கட்சிகள் மற்றும் இயக்கங்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் தஞ்சாவூர் இரயில்வே நிலையத்தில் கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகளின் போது இரயில்வே நிலைய பிரதான நுழைவாயிலின் முகப்பில் தஞ்சாவூரின் அடையாளமான உலக பிரசித்தி பெற்ற பெரிய கோவில் வடிவமைப்பு இடம் பெற்று இருந்தது. தற்போது சீரமைப்பு பணிகளின் போது பெரிய கோவில் வடிவமைப்பு எடுக்கப்பட்டு வடநாட்டு கோவில் வடிவமைப்பு இடம் பெற்றுள்ளது. இந்த நிகழ்வு என்பது தமிழ்நாட்டின் கலாச்சாரம் பண்பாட்டின் மீதான சமஸ்கிருத சனாதனத்தின் திணிப்பாகவும், தொடர் தாக்குதலாகவும் பார்க்க வேண்டி உள்ளது.
இதை கண்டித்து பல்வேறு போராட்டங்கள் தஞ்சாவூரில் நடைபெற்று உள்ளது. தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினரும் இரயில்வே நிலைய பொது மேலாளர் மற்றும் இரயில்வே அமைச்சரை சந்தித்து மீண்டும் பெரிய கோயில் வடிவம் இடம் பெறுவது தொடர்பாக பேசி உள்ளார். இருந்தாலும் இரயில்வே நிர்வாகமும், இரயில்வே துறை அமைச்சரரும் தஞ்சாவூர் மக்களின் உணர்வுகளை மதிப்பதாக தெரியவில்லை.
சீரமைப்பு பணிகளில் தற்போது மேலும் ஒரு நுழைவாயில் புதிதாக ஏற்படுத்தப்பட்டு அதற்கான வேலைகள் நடந்து வருகிறது. தஞ்சாவூர் மக்களின் உணர்வுகளை மதித்து, தமிழ்நாட்டு தமிழர்களின் கலாச்சாரம், பண்பாட்டின் அடையாளமான பெரிய கோயில் வடிவமைப்பு இரண்டு நுழைவு வாயில்கள் முகப்பிலும் இடம்பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி வருகிற ஆகஸ்ட் 22 ஆம் தேதி தஞ்சாவூர் இரயில்வே நிலைய நுழைவாயில் முன்பு மாபெரும் மக்கள் முற்றுகை போராட்டம் நடத்துவது என்று ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
இக்கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் சின்னை.பாண்டியன், மாநகர செயலாளர் எம்.வடிவேலன், மக்கள் அதிகாரம் மூத்த தலைவர் காளியப்பன், காங்கிரஸ் கட்சி நிர்வாகி வழக்கறிஞர் கோ.அன்பரசன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட குழு உறுப்பினர் வெ.சேவையா, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மைய மாவட்ட செயலாளர் கோ.ஜெய்சங்கர், முன்னாள் மாநகர செயலாளர் க.தமிழ் முதல்வன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி மாவட்ட செயலாளர் எஸ்.எம்.ஜெய்னுல் ஆப்தின், இடதுசாரிகள் பொதுமேடை ஒருங்கிணைப்பாளர் துரை.மதிவாணன், சிபிஎம் நிர்வாகிகள் சரவணன், கரிகாலன், விசிக தொழிலாளர் விடுதலை முன்னணி மாவட்ட செயலாளர் அ.யோகராஜ், அனைத்து துறை ஓய்வூதியர் சங்க ஒருங்கிணைப்பாளர் என்.குருசாமி, சி ஐ டி யு மாவட்ட துணைச் செயலாளர் கே.அன்பு நடைபெறும் முற்றுகை போராட்டத்திற்கு நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், அனைத்து தோழமை கட்சிகள் மற்றும் ஜனநாயக இயக்கங்களுக்கு அழைப்பு விடுப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது.