தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.
ஜோ. லியோ யாக்கோப் ராஜ்.
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் பா.பிரியங்கா பங்கஜம் வழிகாட்டுதலின்படி, மிஷன் ரேபிஸ் திட்டத்தின் மூலம் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள சமுதாய மற்றும் வளர்ப்பு நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி முகாம் 19.09.2025 அன்று தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது.
இத்திட்டத்தின் மூலம் தஞ்சாவூர் மாநகராட்சி, வல்லம் பேரூராட்சி மற்றும் நாஞ்சிக்கோட்டை ஊராட்சிகளில் இதுவரை 8,000-க்கும் மேற்பட்ட நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. தற்போது கும்பகோணம் மாநகராட்சியில் வெறிநோய் தடுப்பூசி முகாம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
மேலும், மிஷன் ரேபிஸ் தஞ்சாவூர் திட்டத்தின் கீழ் பல்வேறு பள்ளிகள் மற்றும் பொதுமக்கள் கூடும் இடங்களில் வெறிநோய் தடுப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
அதன் தொடர்ச்சியாக, பள்ளி மாணவர்களுக்கான மிஷன் ரேபிஸ் விழிப்புணர்வு ஓவியப் போட்டி தஞ்சாவூர் அருங்காட்சியகத்தில் நடைபெற்றது. இதில் 50-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர்.
மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளைச் சேர்ந்த பணியாளர்களுக்கான மிஷன் ரேபிஸ் வழிகாட்டுதல் நிகழ்ச்சி தஞ்சாவூர் அருங்காட்சியகத்தில் நடைபெற்றது. இதில் கோவாவிலிருந்து மிஷன் ரேபிஸ் அகில இந்திய கல்வி இயக்குநர் டாக்டர் முருகன் அப்பு பிள்ளை, தென்னிந்திய திட்ட மேலாளர் பாலாஜி ராஜ் மற்றும் கல்வி மேலாளர் அசோக் மெகாரி ஆகியோர் கலந்து கொண்டு கருத்துரை வழங்கினர்.
இந்நிகழ்வில் கால்நடைத்துறை இணை இயக்குநர் பொறுப்பு மருத்துவர் சரவணக்குமாரி, ஓய்வு பெற்ற இணை இயக்குநர் மரு.பாஸ்கரன், தஞ்சாவூர் மாவட்ட பிராணிகள் வதை தடுப்புச் சங்க ஒருங்கிணைப்பாளர் பொறியாளர் முத்துக்குமார், கல்வி அலுவலர் ராபின் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.