எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி
சீர்காழி அருகே பழையாறு மீனவர் வலையில் சிக்கிய 300 கிலோ எடையுள்ள சுறா மீன்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே பழையாறு மீன்பிடி துறைமுகத்திலிருந்து மீனவர்கள் தினந்தோறும் விசைப்படகுகள் பைபர் படகுகள் மற்றும் நாட்டுப்படகுகள் மூலம் 6000 க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்குள் சென்று மீன் பிடித்து வருகின்றனர். கடந்த ஒரு மாத காலமாக விசைப்படகுகள் மூலம் மீனவர்களுக்கு போதிய மீன்கள் கிடைக்காததால் 50 க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ளன.
இதர படகுகள் கடலுக்குள் சென்று மீன் பிடித்து வருகின்றன. சிறிய வகை மீன்கள் மட்டுமே கிடைப்பதால் மீனவர்களுக்கு போதிய லாபம் கிடைக்கவில்லை என்றும் வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் விசைப்படகின் மூலம் மீனவர்கள் கடலுக்குள் சென்று மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். கடற்கரையிலிருந்து பத்து நாட்டிக்கல் மயில் தூரத்தில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது ஒரு விசைப்படகில் மீனவர் வலையில் ஒரு பெரிய சுறா மீன் சிக்கியது கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
அதனை மற்ற மீனவர்கள்,படகுகளின் உதவியுடன் துறைமுகத்துக்கு பக்குவமாக கொண்டு வந்து சேர்த்தனர். 3 அடி அகலமும், 12 அடி நீளம் 300 கிலோ எடை கொண்ட சுறா மீன் பெரும்பாலும் வலையில் சிக்குவதில்லை.அபூர்வமாக வலையில் சிக்கி மிகவும் சிரமத்துடன் மீனவர்கள் கரைக்கு கொண்டு வந்து சேர்த்தனர். இந்த சுறா மீன் ஒன்றரை லட்சம் விலை போய் உள்ளதாக மீனவர்கள் தெரிவித்தனர்.