திருச்சி வாய்ஸ் அறக்கட்டளை சார்பில் துணிப் பை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.வாய்ஸ் அறக்கட்டளை திட்ட இயக்குனர் கிரிகோரி துணிப்பையினை அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலரும் சமூக ஆர்வலருமான விஜயகுமாரிடம் வழங்கி பேசுகையில்,மஞ்சள் பை 1980களின் இறுதிவரை பிரபலமாக இருந்த ஒரு வகை துணிப் பை ஆகும். இப் பைகள் ஆழ்மஞ்சள் வண்ணம் கொண்டவையாக இருந்த காரணத்தால் இந்தப் பெயரைப் பெற்றன.

இப் பைகள் பெரும்பாலும் துணிக்கடை, மளிகைக்கடை போன்றவற்றில் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டவையாக இருந்தன. மேலும் திருமண தாம்பூலப் பையாக மஞ்சள் பைகளில் மணமக்கள் பெயர் அச்சிட்டு வழங்கி வந்தனர். இதை மளிகைப் பையாகவும் பள்ளிக்கூடப் பையாகவும் பயணப் பையாகவும் பணப் பையாகவும் பலரும் பலவாறு பயன்படுத்தி வந்தனர்.

இது இரு பக்கங்களிலும் பட்டைகள் அமைக்கப்பட்டிருப்பதாகவும் எளிய பையாகவும் எடையற்றதாகவும் வெறும்பையை கால்சட்டைப் பையில் மடித்து வைத்துக் கொண்டு செல்லக்கூடிய அளவுக்கு இலேசானதாகவும் இருக்கும். எண்பதுகளின் இறுதியில் துணிப் பைகளுக்கு மாற்றாக நெகிழிப் பைகள் (polythene bags) பயன்பாட்டுக்கு நுழைந்த பின்னர் இதன் பயன்பாடு நகரப் பகுதிகளில் பெருமளவு குறைந்து, பின்னர் இதைப் பயன்படுத்துவது என்பது நாகரீகமற்றதாக சிலரால் கருதப்படும் நிலை ஏற்பட்டது.ஒரே முறை பயன்படுத்தக்கூடிய ப்ளாஸ்டிக் பை தான் சுற்றுச்சூழலை அதிகம் பாதிக்கிறது.

ப்ளாஸ்டிக் பையினை எரித்து சாம்பலாக்குவதன் மூலமாகவும் நிலத்தில் கொட்டி நிரப்புவதன் மூலமாகவும் நிலம், நீர், காற்று அனைத்தையும் ப்ளாஸ்டிக் மாசுபடுத்துகிறது.

நச்சுத்தன்மை கொண்ட ரசாயனங்களை பணியாளர்கள் சுவாசிக்க நேரிடுகிறது. சுற்றுச்சூழலில் புற்று நோய் உண்டாக்கக்கூடிய பொருளை வெளியிடுகிறது. சுற்றுச் சூழலை காக்க நெகிழிப் பயன்பாட்டை (plastic) குறைக்க மாணவர்கள் ‘மஞ்சப்பை’யை அதாவது துணிப்பை பயன்பாட்டை அதிகரிக்க வேண்டுமென்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *