கரூர் செய்தியாளர் மரியான் பாபு
கரூர் மாவட்ட அரசு மருத்துவ கல்லூரியில் “தமிழ் கனவு” நிகழ்ச்சி நடைபெற்றது.
தமிழ்ப் பண்பாட்டின் பெருமையை இளைய தலைமுறைக்கு, குறிப்பாக, கல்லூரி மாணவர்களுக்கு உணர்த்தும் நோக்கில் தமிழ்நாடு முழுவதும் 200 கல்லூரிகளில், தமிழர் மரபும் நாகரிகமும், தமிழ்நாட்டில் சமூக நீதி, பெண்கள் மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பொருண்மைகளில் தமிழ்நாட்டின் சிறந்த சொற்பொழிவாளர்களைக் கொண்டு “மாபெரும் தமிழ்க் கனவு” நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக, கரூர் மாவட்டத்தில் முதல் நிகழ்வு மாவட்ட ஆட்சியர் மீ.தங்கவேல் தலைமையில் நடைபெற்றது. சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர் விமல்ராஜ் நோக்கவுரை ஆற்றினார்.
கரூர் அரசு மருத்துவக் கல்லூரிக் கலையரங்கில் காலை தொடங்கிய இந்நிகழ்வு Startup TN செயல் அலுவலர் சிவராஜா ராமநாதன் கலந்து கொண்டு “புதுயுகத் தொழில் முனைவு” என்னும் தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்.
சிறப்பு விருந்தினர் தனது உரையில், நவீன தொழில்நுட்ப வளர்ச்சிக்குத் தகுந்தாற்போல புதிய தொழில் தொடங்குவதற்கான அறிவுரைகளையும் வழிகாட்டுதல்களையும் சிறப்பாக வழங்கினர்.
இளைய தலைமுறையினர் பணிநாடுநர்களாக மாற வேண்டியது காலத்தின் தேவை என்பதையும், உலகினில் வலிமையானவையே வாழும் என்னும் கூற்றுக்கு ஏற்ப வேகமாக மாறிவரும் காலச்சூழலுக்கு ஈடுகொடுத்து இளைஞர்களும் வாழ்வில் விரைவாக முன்னேற வேண்டும் என்பதையும் எடுத்துரைத்தார்.
நிகழ்வின் தொடக்கத்தில் தமிழ்நாட்டின் தொன்மையையும் சிறப்பையும் விளக்கும் கீழடி, இரும்பின் தொன்மை, இராஜராஜ சோழன் ஆகிய காணொளிகள் திரையிடப்பட்டன. தமிழ்நாட்டில் உயர்கல்வியின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் வகையில் கல்வித் திட்ட விளக்கக் காணொளியும் ஒளிபரப்பப்பட்டது.
கலால் துறை துணை ஆணையர் கருணாகரன் திட்ட விளக்க உரை ஆற்றினார். மேலும், விழாவில் திருச்சி மண்டலக் கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் முனைவர்.க.இராதாகிருஷ்ணன் அவர்கள் பங்கேற்றார் மருத்துவக் கல்லூரி Dean மருத்துவர் R.சாந்திமலர் நன்றியுரையாற்றினார் .