கோவை வால்பாறை நகராட்சியில் ரூ.80 கோடி ரூபாய் அளவிற்கு ஊழல் செய்துள்ள நகராட்சி தலைவர் அழகு சுந்தரவள்ளி மற்றும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி சமூக ஆர்வலர் ஒருவர் கோவை லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு போலீஸ் புகார் அளித்துள்ளார்.
கோவை மாவட்டம் வால்பாறை தாலுகாவை சேர்ந்தவர் மணிவண்ணன். சமூக ஆர்வலர், இவர் கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு போலீசில் புகார் மனு ஒன்று அளித்துள்ளார்.
அதில் வால்பாறை நகராட்சியில் ரூ.80 கோடி வரை முறைகேடு நடந்திருப்பதாக நகராட்சி நிர்வாக இயக்குனர் தலைமையில் நடந்த தணிக்கையின் மூலம் தெரிய வந்துள்ளது.
அதன்படி வால்பாறை நகராட்சியில் மட்டும் ரூ.80 கோடி ரூபாய் அளவில் மோசடியில் ஈடுபட்ட நகராட்சி நகர் மன்ற தலைவர் அழகு சுந்தரவள்ளி மற்றும் ஊழல் நடந்த காலங்களில் பணியாற்றிய ஆணையாளர்கள், பொறியாளர்கள், உதவி மன்ற தலைவர்கள், போன்றோர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
மேலும் இதுகுறித்து வால்பாறை நகராட்சி ஆணையருக்கு புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே ரூ.80 கோடி வரை ஊழல் செய்த வால்பாறை நகராட்சி தலைவர் உள்ளிட்டோர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து விசாரிக்க வேண்டும் என தெரிவித்தார்.